உடலுக்குள் எலும்புகள் இருக்கிறதா இல்லையா என்று ஆச்சரியப்படும் வகையில் உடலை ரப்பர் போல் தன் விருப்பப்படி வளைத்து யோகாசனம் செய்யும் 17 வயது குஷி ஹேமசந்திராவின் யோகா விடியோவை யூடியூப்பில் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கி குவித்துள்ள சண்டிகரைச் சேர்ந்த குஷி ஹேமசந்திரா, ஒன்பது வயதிலிருந்தே யோகா பயிற்சிப் பெறத் தொடங்கி விட்டாராம்.
சிறு வயதில் தன்னுடைய மூச்சுத் திணறல் காரணமாக யோகா பயிற்சியாளர் ஒருவரின் அறிவுரைப்படி எளிமையான யோகா மற்றும் பிரணாயாமம் போன்றவைகளில் பயிற்சிப் பெற்று வந்த குஷி, அதே பயிற்சியாளரின் மேற்பார்வையில் மேலும் பல புதிய ஆசனங்கள் கற்றுக் கொள்ள விரும்பினார்.
அத்துடன் நிற்காமல் யோகா போட்டிகளில் பங்கேற்கவும் ஆர்வம் காட்டினார். இவரது பயிற்சியாளர் கீதா குமார், இவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் மூத்த பயிற்சி யாளரான கணேஷ் குமார் என்பவரை இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒன்பது வயது முதலே யோகா பயிற்சிப் பெற்று வரும் குஷி, 11 வயதிலேயே மற்றவர்களுக்கும் யோகா கற்றுத் தரும் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.
தன்னைவிட மூத்தவர்களுக்கு யோகா பயிற்சியளிக்கும் போது அவர்களும் இவரது கட்டளைக்கேற்ப பயிற்சி செய்தனர், இதனால் இவருக்கு நாட்டிலேயே இளவயது "யோகா குரு' என்ற சிறப்புப் பட்டமும் கிடைத்தது.
2014-ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஷாங்காய் முதலாவது சர்வதேச யோகா இன்விடேஷன் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
தொடர்ந்து இரண்டாவது சர்வதேச யோகா போட்டி மற்றும் ஆறாவது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று முறையே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
2017-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற போது, நான்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
2018 -ஆம் ஆண்டு "உலக யோகா சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றதோடு, தொடர்ந்து எட்டாவது மற்றும் ஒன்பதாவது "ஆசிய யோகா சாம்பியன்ஷிப்' போட்டிகளிலும் பதக்கங்களை வென்றார். இந்தியா சார்பில் சர்வதேச மேடையில் பங்கேற்ற வகையில் 14 பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
முதன்முறையாக உலக சாதனையாளர் பதிவேட்டில் 14-ஆவது வயதிலேயே இவரது பெயர் இடம் பெற்றது. வின்யாசா யோகா, ஹட யோகா, பவர் யோகா, ஐயங்கார் யோகா, குண்டலினி யோகா, அஷ்டங்க யோகா, பிக்ராம் யோகா, யின் யோகா, ரெஸ்ட்ரோடிவ் யோகா போன்றவைகளை செய்வதில் வல்லவர்.
ஒருமுறை கெனிச்சி இபினா என்பவர் தலையை முதுகு புறமாக திருப்பி சர்வ சாதாரணமாக செய்யும் அமெரிக்கன் காட்டேலண்ட் என்ற ஆசனத்தை பார்த்து வியந்ததோடு, தானும் இரண்டு கைகளால் பாதத்தைத் தொட்டபடி உடலை வளைத்து ஒரு நிமிடத்தில் 15 முறை அது போல் செய்து காட்டி சாதனை படைத்தார்.
இதுவே இவருக்கு இந்தியாவின் "யோகா அதிசயப் பெண்' என்ற சிறப்பைப் பெற்று தந்துள்ளது.
No comments:
Post a Comment