'இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகம் பெயிலாக காரணமான, 'ஆன்லைன்' தேர்வு முறையை மாற்ற வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் நேரடி கற்பித்தல் வகுப்புகள், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளையும், ஆன்லைன் வழியிலேயே நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

இதன்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் முறையில், அண்ணா பல்கலை நடத்தி வருகிறது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை போல அல்லாமல், செயற்கை நுண்ணறிவு முறையிலான சாப்ட்வேரை பயன்படுத்தி, இந்த ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், 2020ம் ஆண்டு டிசம்பரில் நடக்க விருந்த தேர்வுகள், இந்த ஆண்டு பிப்., மற்றும் மார்ச்சில் நடந்தன. அதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.தேர்வு எழுதிய பலர், பாஸா, பெயிலா என, தெரியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதோ ஒரு குறையை கூறி,தேர்ச்சி சான்றிதழ் வழங்கவில்லை. இதன் காரணமாக, மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து, இன்ஜினியரிங் மாணவர்கள் கூறியதாவது:

அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை நடத்தும் ஆன்லைன் தேர்வுக்கு, குழப்பமான சாப்ட்வேரை, பல்கலை நிர்வாகம் பயன்படுத்துகிறது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பது போல, கேமராவை விட்டு ஒரு நொடி கண்ணை திருப்பினால் கூட, காப்பி அடிப்பதாக சாப்ட்வேர் பதிவு செய்கிறது. செயற்கை நுண்ணறிவு முறையில், இதுபோன்ற குழப்பமான தேர்வு முறையை, பல்கலை நடைமுறைப்படுத்தி உள்ளது. 

இதன் காரணமாக, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்று, இன்ஜினியரிங் சேர்ந்த பல மாணவர்கள், இந்த ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற முடிய வில்லை. விடைத்தாளில் என்ன எழுதியுள்ளோம் என்று, தேர்வுத்துறை பார்ப்பதை விட, மாணவர்கள் கண்ணசைத்தனரா, கையசைத்தனரா, அருகில் யாரும் வந்து நின்றார்களா என்ற சாப்ட்வேர் குறிப்புக்கு தான் மதிப்பெண் வழங்குகின்றனர். இந்த முறையை உடனே மாற்றா விட்டால், இன்ஜினியரிங் படிப்பை பலரும் பாதியில் கைவிடும் அபாயம் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!