டீ காபி குடிச்சா தான் சுறுசுறுப்பா இருக்கு. தலைவலி, ஆபீஸ் டென்சனுக்கு தீர்வே காபிதான், டீ குடிக்காம மூளையே இயங்காது என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.
சிலருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் டீயோ, காபியோ குடிக்காவிட்டால், ஒரு வேலையும் நடக்காது. புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க டீ, காபி பானங்கள் உதவுகிறது என்றாலும், அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஆரோக்கியத்துக்கு எதிராகிறது.
எப்போது பிரச்னை?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது காபி, டீக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு, இரண்டு கப் காபி, மூன்று அல்லது நான்கு கப் டீ குடிப்பதனால் எந்த பாதிப்புமில்லை. காபியில் உள்ள காபைன் அளவு உடலில் அதிகரிக்கும்போது, அமைதியற்ற நிலை, படபடப்பு, துாக்கமின்மை, பசியின்மை போன்றவை ஏற்படும். இதேபோல், அளவுக்கு மீறி டீ குடித்தால், நரம்பு மண்டலக் கோளாறு, துாக்கமின்மை, வாந்தி, பித்தம் ஏற்படும்
.
டீ, காபி பழக்கத்திலிருந்துவிடுபடுவதற்கு என்ன வழி
அதிகமான தண்ணீர்
காபி, டீ பழக்கத்தில் இருந்து விடுபடுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், பகலில், அதிகமாக தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக, இரண்டு லிட்டருக்கு அதிகமாக பருகுங்கள். தண்ணீர் உடலை நீரேற்றம் செய்து, நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீரை குடியுங்கள்.
பழச்சாறுக்கு பழகுங்கள்
எந்தவொரு அடிமை பழக்கத்தில் இருந்தும் விடுபட, அதற்கு ஆரோக்கியமான மாற்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எப்போதெல்லம் காபி, டீ பருக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும்போது, சிறிய கிளாசில் பழ ஜூஸ் பருகுங்கள். ரெடிமேடு பானமின்றி, உண்மையான பழ ஜூஸ் எடுப்பது முக்கியம். ஆரோக்கியத்துடன், உங்கள் உடலை சுத்தமாகவும் வைத்திருக்கும்.
கப் எண்ணுங்கள்
நினைக்கும் போதெல்லாம் டீ, காபி குடிப்பவரா? இனி, நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு கப்பையும் எண்ணத் துவங்குங்கள். எண்ணுவது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்கலாம். காபைன் நிறைந்த ஒரு கப் காபியை எத்தனை முறை பருகுகிறீர்கள் என எண்ணுவது, அது உங்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உணர வைக்கும். நாள், வாரம், மாதம் என இந்த கணக்கை கண்காணிக்க தவறாதீர்கள்.
படிப்படியாக குறையுங்கள்
அடிக்சனாக இருக்கும் எந்த பழக்கத்தில் இருந்தும் படிப்படியாகத்தான் விடுபட வேண்டும். மெதுவாகவும், சீராகவும் காபி, டீ பழக்கத்தை குறையுங்கள். ஒரு நாளில், ஏழு கப் குடிப்பவர் எனில், முதலில் ஒரு கப்பை குறையுங்கள்.சில நாட்களுக்கு இதை தொடர்ந்து, பின்னர், மற்றுமொரு கப் குறையுங்கள். இதேபோல், பிளாக் டீக்கு பதிலாக, லைட் டீ, ஸ்ட்ராங்கிற்கு பதிலாக லைட்டாக குடிக்க பழகுங்கள்.
ஹெர்பல் வழி
டீயை கைவிட விரும்பும் உங்கள் முயற்சிக்கு ஹெர்பல் டீ கைகொடுக்கும். மூலிகை, மசாலா பொருட்களால் ஆன டீ எடுத்துக்கொள்வது, தினசரி டீ எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க உதவும். காபி பிரியராக இருந்தால், கிரீன் காபி டிரை செய்யலாம். கிரீன் காபியில் காபைன் அளவு குறைவாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். வெறுமென பால் அல்லது மஞ்சள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றை சேர்த்தும் பருகலாம்
.
மித சூடு; மிக நன்று!
டீ, காபியை சுடச்சுட ஆவி பறக்க குடிப்பவர்களும் இருக்கின்றனர். கொஞ்சம் சூடு குறைந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகச்சூடாக பானங்களை பருகுவது, வயிற்றின் உட்சுவரில் புண்களை ஏற்படுத்தும். குறிப்பாக, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது குடலை பாதிக்கும். அதிகளவு சூடான பானங்களை, நீண்ட நாட்களாக பருகுவோருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. எனவே, மித சூடு, மிக நன்று!
No comments:
Post a Comment