வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா? 


கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப்பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை சிமிட்டிக்கொண்டிருக்கும். கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். 

ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன. கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடா போன்ற பானங்களை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்த்து உடல் பருமன் அதிகரிக்கிறது. குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. நமது உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட சோடாபோன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. 

இதனால் மற்றவர்களை காட்டிலும் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோமா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால் குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. குளிர்பானங்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. 

இதனை அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் வளர்சிதை மாற்றம செய்ய முடியாமல் பிரக்டோசை கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு கல்லீரலை சுற்றி படிந்து கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்குகிறது. இதனால் தொப்பை உருவாகி இரண்டாம் வகை நீரழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. 

இன்சுலின் என்ற ஹார்மோன் நமது ரத்த ஓட்டத்திலிருந்து குளுகோசை உயிரணுக்களுக்க கொண்டு செல்கிறது. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா போன்ற குளிர்பானங்கள் குடிக்கும் போது இன்சுலின் செயல்பாடு குறைகிறது. இதனால் ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் பிரிக்க கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை. 

இதுமட்டுமல்லாமல் சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கணையப்புற்றுநோய் உருவாகும்வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு பழங்கள், இளநீர், பதநீர் போன்றவற்றை பயன்படுத்தி உடல் நலத்தை மேம்படுத்துவதே சிறந்தது.

Post a Comment

Previous Post Next Post

Search here!