சென்னையில் உள்ள பிரதான சாலைகள், அரசுக்கு சொந்தமான இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுற்றுச்சுவர்களில், மாநகராட்சியுடன் இணைந்து, சமூக விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய ஓவியங்களை வரைந்து வருகின்றனர், 'கரம் கோர்ப்போம்' அமைப்பினர்.
இதன் மூலம், குப்பை கொட்டப்பட்ட இடங்கள் துாய்மைபடுத்தப்பட்டு, அவ்விடங்களில் உள்ள சுவர்களில், அழகிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதனால், அப்பகுதி சுத்தமாவதுடன், மக்களுக்கு சுகாதாரம் குறித்தும், சமூக நலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து, கரம் கோர்ப்போம் அமைப்பின் நிறுவனரான சிவகுமார் கூறியதாவது:
இந்தச்
செய்தியையும் படியுங்கள்
ஆரம்பத்தில், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். தற்போது அவ்வகை நிறுவனங்களின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறேன். என் மனைவி உமா மகேஸ்வரி, சிவில் இன்ஜினியர்; சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.முதன் முதலில், எங்கள் வீட்டின் முன் உள்ள சுவரில் ஓவியங்கள் வரைந்தோம்.
இதை பார்த்து, அக்கம் பக்கத்தினர் நாங்கள் வசிக்கும் தெரு முழுதும், இது போல் அழகாக்க வேண்டும் என எண்ணினர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, அனைவரும் ஒன்று சேர்ந்து, தெரு முழுதும் ஓவியம் வரைந்து, பூச்செடிகள் வைத்து தெருவை அழகாக்கினோம். எங்கள் செயலுக்கு தானாகவே ஊடக வெளிச்சம் கிடைத்தது.இதை பார்த்த மற்ற பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், எங்களை தொடர்பு கொண்டனர். அதுவே, 2016ம் ஆண்டு கரம் கோர்ப்போம் என்ற அமைப்பு உருவாக காரணமானது.
இந்தச்
செய்தியையும் படியுங்கள்
தற்போது எங்கள் அமைப்பில் நிரந்தர உறுப்பினர்கள், 20 பேர் மற்றும் தன்னார்வலர்களாக, 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு சுவர்கள், குப்பைமேடாக, திறந்தவெளி கழிப்பிடமாக உள்ள இடங்களை அந்தந்த பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கண்டறிந்து, மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, அந்த இடங்களை சுத்தம் செய்து சீராக்கி எங்களிடம் தெரிவிப்பர்.அந்த இடங்களில் உள்ள சுவர்களில், கைதேர்ந்தவர்களை கொண்டு வர்ணம் பூசுவோம். சில இடங்களில் மாநகராட்சியே அந்த பணியை எங்களுக்கு செய்து கொடுக்கிறது.
பின் அந்த சுவரில், ஐ.டி., ஊழியர்கள், வியபாரிகள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் வந்து ஓவியங்கள் வரைவர்.
அந்தந்த பகுதி மக்களும் இணைந்து எங்களுடன் கரம் கோர்த்து பணியாற்றுவர். அனைவரின் கூட்டு முயற்சியில், சுவர் அழகானதாக தயாராகும். வார விடுமுறை நாட்களில் தான் நாங்கள் ஓவியங்கள் வரைகிறோம். எங்களிடம் பிரஷ் போன்ற பொருட்கள் உள்ளன. நலச்சங்கங்கள் மற்றும் ஸ்பான்சர்ஸ் எங்களுக்கு தானாக முன்வந்து பெயின்ட் வழங்குவர். மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கேட்டு கொண்டதால், ஸ்பான்சர்ஸ் உதவியுடன் பல்வேறு பூங்காக்கள், மூன்று மாநகராட்சி பள்ளிக்கூடங்களில், ஓவியம் வரைந்துள்ளோம்.
மேலும் பல பள்ளிகளில், ஓவியம் வரைய திட்டமிட்டிருந்தோம். ஆனால், கொரோனாவால் அத்திட்டம் தள்ளியுள்ளது. பொது இடங்கள் மட்டுமின்றி தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவர், கோவில் போன்ற பல்வேறு இடங்களில், அதன் நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கிணங்க ஓவியம் வரைந்துள்ளோம்.இது தவிர, கழிவு குப்பையை கையால்வது குறித்த விழிப்புணர்வை பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்கள் மட்டுமின்றி, அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள சங்கங்கள் கேட்டு கொண்டால், அங்கு சென்று அது குறித்து விளக்குகிறோம். நாம் வாழும் இடங்களை சுத்தமாக, சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், ஓவியக்கலை மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், எங்கள் கரம் கோர்ப்போம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வரலாறு அறிந்து செயல்படுகிறோம்
சென்னையில் இதுவரை மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், போரூர், ஜார்ஜ்டவுன் போன்ற பல்வேறு இடங்களில், 70 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 55 இடங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளோம். ஒவ்வொரு இடங்களிலும் ஓவியம் வரையும் முன், அந்த இடத்தின் வரலாறு மற்றும் சமூக விழிப்புணர்வு படங்களை கருவாக எடுத்து கொண்டு, அதற்கேற்ப கம்ப்யூட்டரில் ஓவியங்களை டிசைன் செய்வோம். அதை சுவரில் ஓவியங்களாக வரைந்து, சமூக விழிப்புணர்வு வாசகங்களை எழுதுவோம்.தற்போது பக்கிங்ஹாம் கால்வாய் ஓடக்கூடிய, மயிலாப்பூர் கல்வி வாரு தெரு, 3.06 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சாலையாக மாற்றும் பணி நடக்கிறது. அங்கே படகு போக்குவரத்து இருந்த வரலாறு உள்ளது. அந்த அடிப்படையில் ஓவியம் வரைந்து வருகிறோம்.
மக்கள் ஒத்துழைப்பு
சில இடங்களில் ஓவியம் வரைய செல்லும் போது அரசியல் கட்சியினர், சமூக விரோதிகளால் தொல்லை ஏற்பட்டுள்ளது. காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம், அதற்கு உரிய தீர்வு கண்டு எங்கள் பணியை செய்துள்ளோம்.நாங்கள் ஓவியம் வரைந்துள்ள பெரும்பாலான இடங்களில், விழிப்புணர்வு ஏற்பட்டு, தற்போதும் சுத்தமாக உள்ளது. 20 சதவீத இடங்கள் பழைய நிலைக்கு சென்றுவிட்டன. அதற்கு அந்த பகுதி சமூக விரோதிகளே காரணம். மக்கள் ஒத்துழைப்பதால், எதற்கும் அஞ்சாமல் எங்கள் பணியை தொடர்கிறோம். நல்லது செய்யும் எவருக்கும் ஆரம்பத்தில் மிரட்டல் வருவது சகஜம் தான். நாட்கள் செல்லச் செல்ல, நன்மை வளர்ந்து தீமை குறையும். எனவே, தொடர்ந்து எங்கள் விழிப்புணர்வு பயணத்தை தொடர்வோம்.
No comments:
Post a Comment