தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம் தேர்தல் கமி‌ஷனின் 10 காரணங்கள் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 May 2021

தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம் தேர்தல் கமி‌ஷனின் 10 காரணங்கள் அறிவிப்பு

தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனின் 10 காரண விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


தபால் வாக்குகள் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண உள்ளனர். இதற்கு முன்பு 500 தபால் ஓட்டுகள்தான் இருக்கும். 

ஆனால் இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் கமி‌ஷன் அனுமதித்து இருந்ததால் தபால் ஓட்டுகள் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 1,500 முதல் 5 ஆயிரம் ஓட்டுகள் வரை தபால் ஓட்டுகள் உள்ளன. இதனால் பல தொகுதிகளில் தபால் ஓட்டுகள் ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விடும் அளவுக்கு உள்ளது. 

தபால் ஓட்டுகளில் எந்த ஓட்டு செல்லும், எது செல்லாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் விடப்பட்டுள்ளது. நிராகரிக்க காரணங்கள்? தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி தேர்தல் கமி‌ஷன் 10 காரணங்களை கூறியுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:- 

 1. ‘13-சி’ படிவ உறைக்குள் ‘13-ஏ’படிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும். 

 2. உறுதிமொழி, வாக்காளரால் முறைப்படி கையொப்பமிடப்படாமல் இருந்தால் அல்லது சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருத்தல் அல்லது பிற வகையில் பெரிதும் குறைபாடாக இருத்தல், கண்டறியப்பட்டால் நிராகரிக்கலாம். 

 3. உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், ‘13-பி’இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுபட்டிருத்தல் தெரியவந்தால் நிராகரிக்கலாம். 

 4. யாதொரு வாக்கும் அதில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது செல்லாது. 

 5. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் அது செல்லாது. 

 6. போலியான வாக்குச்சீட்டாக இருக்குமாயின் அது செல்லாது. சேதம் 7. வாக்குச்சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும். 

 8. தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லையாயின் நிராகரிக்கப்படும். 9. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையில் வாக்குச்சீட்டில் உள்ள குறி இருக்குமாயின் அது செல்லாது. 

 10. வாக்களிப்பவரை இன்னாரென்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக்குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment