அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தக பாட காணொலிகள் கல்வி தொலைக்காட்சியில் வரும் 11-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. 


இதனால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கையேடு மற்றும் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, 2 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் கடந்த ஏப். 22-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பயிற்சி புத்தக பாடங்களும் மே 11-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரிட்ஜ் கோர்ஸ் கையேடு
பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் கையேடு காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு, கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, பயிற்சி புத்தகப் பாடங்களும் தற்போது காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை கல்வி தொலைக்காட்சியில் வரும் 11 முதல் 18-ம் தேதி வரை ஒளிபரப்பு செய்யப்படும். 

2 முதல் 9-ம் வகுப்புகளுக்கு தினமும் 2 காணொலிகள் வீதம் ஒரு மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பாகும். இதற்கான காலஅட்டவணையை பள்ளிகளுக்கு அனுப்பிவைத்து, காணொலிகளை மாணவர்கள் தினமும் பார்த்து பயன்பெறுவதை உறுதிசெய்ய, அனைத்து தலைமை ஆசியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!