தினம் ஒரு தகவல் சங்குகள்... முத்துச்சிப்பிகள்...! - EDUNTZ

Latest

Search here!

Wednesday 12 May 2021

தினம் ஒரு தகவல் சங்குகள்... முத்துச்சிப்பிகள்...!

சங்கு ஓர் அற்புதமான கலைப்பொருள். சிப்பியினங்களைப் போல சங்குகளும் மெல்லுடலிகள். சங்கின் சுருள் பகுதியின் மேலச்சு மேலாகவும், வாய் கீழாகவும் நம்மை நோக்கி வைத்துக்கொண்டால் வலப்பக்கம் வாய் அமைவது வலம்புரிச் சங்கு, அதே நேரத்தில் சங்கின் இடப் பக்கம் வாய் அமைவது இடம்புரிச் சங்கு. இடம்புரிச் சங்குகள் ஜாம் நகர் (கட்ச்), திருவனந்தபுரம், தூத்துக்குடி, மண்டபம், ராமநாதபுரம் பகுதி கரையிலிருந்து கடலுக்குள் 10 முதல் 16 கி.மீ. தொலைவுக்குள் ஏராளமாகக் கிடைத்துவந்தன. 


 இடம்புரி, வலம்புரிச் சங்குகள் டர்பினெல்லா பைரம் என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. வலம்புரிச் சங்கைப் போலவே முத்து, முத்துச் சிப்பி குறித்தும் ஏராளமான நம்பிக்கைகள் உள்ளன. பட்டு வணிகத்துக்கு என்று உலக அளவில் பட்டுப்பாதை இருந்ததைப் போன்று முத்துப்பாதையும் இருந்தது. கன்னியாகுமரிக்கும் ராமேசுவரத்துக்கும் இடைப்பட்ட கடலோர பகுதிகளில் நடைபெற்ற முத்துக்குளித்தல் காரணமாக முத்துக் குளித்துறை என்னும் பெயர் வந்தது. குறிப்பாக தூத்துக்குடிக்கு முத்துநகர் எனும் பெயர் வந்தது. 

நவரத்தினத்தைப் போன்று விலையுயர்ந்த பொருளாக முத்துவும் அணிகலன்களில் பயன்படுத்தப்பட்டது. முத்துச்சிப்பி இரண்டு தோடுகள் கொண்ட மெல்லுடலி ஆகும். இதன் குஞ்சுப் பருவத்தில் ஸ்பாட் என்னும் இளம் உயிரியாக நீந்தி வளரும் இவ்வினம், உருமாற்றம் அடையும்போது, அங்குள்ள தரைகளில் திண்ணமான இடங்களில் ஒட்டிக்கொள்கின்றன. 

இந்த இடங்களை முத்துப்படுகை என்பார்கள். அறுவடையாகும் எல்லாச் சிப்பிகளிலும் முத்துகள் இருப்பதில்லை. கிடைக்கும் முத்துகள் அத்தனையும் முதிர்ந்தவையாக இருப்பதில்லை. முத்தெடுத்தலைவிட சங்கு குளித்தல் வருவாய் மிகுந்த தொழில். முத்துக்கள் இளமஞ்சள், கருப்பு, மூக்குப்பொடி நிறத்தில் இருக்கும். உள்ளே அகப்படும் துகளின் வடிவத்தையும் அளவையும் கால அளவையும் பொறுத்து, முத்தின் வடிவமும் அளவும் மாறுபடுகிறது.

No comments:

Post a Comment