ஏலம் குறித்து சில விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏலத்தில் 10-க்கும் மேற்பட்ட முறைகள் உள்ளன. மிகுந்த வெளிப்படையான வர்த்தக முறை இது.
ஏலம் விடும் நடைமுறை இன்று நேற்றல்ல, கி.மு காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முற்காலத்தில் அடிமையாக இருந்தவர்களை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டியே நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், அரிய பொக்கிஷங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
பொதுவாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கட்டவில்லை என்றால் கடனுக்கு ஈடாக பிணையம் வைக்கப்பட்ட வீட்டையோ, சொத்தையோ அல்லது நகையையோ ஏலம் விட்டு தங்களுக்கான கடன் தொகையை திரும்ப எடுத்துக் கொள்வார்கள்.
இது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இப்படி ஏலத்துக்கு வரும் சொத்துக்களை சந்தை விலையை விட குறைவாக வாங்கலாம். இதற்கு ஏலத்தில் பொருட்களை வாங்குபவரின் மனநிலையில் இருந்து யோசிக்க வேண்டும்.
ஜப்தி செய்த ஒரு வீட்டை ஒரு வங்கி ஏலம் விடுகிறது என்றால், கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்று கணக்கிட்டையோ அல்லது சந்தை மதிப்பு கணக்கிட்டையோ வைத்து தொகையை நிர்ணயிப்பார்கள்.
தவிர ஏலத்தில் வீடு வாங்குகிறோம் என்றால், அந்த வீடு பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும். பத்திரப் பதிவில் வங்கி மேலாளர் கையொப்பமிடுவார். இப்படி ஏலத்தில் விடப்பட்ட வீட்டை வாங்க ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
ஏலத்தில் வி்டப்படும் தங்க நகைகளை சந்தை விலையை விட குறைவான விலையில் வாங்கலாம். அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விட்டு விடமாட்டார்கள்.
நான்கு, ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பியும், நகையை அடகு வைத்தவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால்தான் ஏலம் விடப்படும். இதனால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது.
கட்டவேண்டிய அசல், வட்டி மற்றும் அபராதத் தொகை என அனைத்தையும் சேர்த்துதான் ஏலத்தொகை இருக்கும்.
ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையைக் கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்தால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்துவிடுவார்கள். புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி என தனியாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும். "ஏலத்தில்" அந்த சிக்கல் இல்லை.
No comments:
Post a Comment