இணையத்தில் தமிழ்ச் செயலிகள்! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 26 May 2021

இணையத்தில் தமிழ்ச் செயலிகள்!


தமிழ் உரை நடையில் இடம் பெற்றிருக்கும் ஒற்றுப்பிழை, சொற்பிழைகள் போன்றவற்றைத் திருத்தும் செயலி, தமிழ் உரையினை ஒலிக் கோப்பாக மாற்றிக் கொள்ளும் செயலி, தமிழ் மொழியிலான கட்டளையினைச் செயல்படுத்தும் தமிழ் ரோபோ, தமிழ் மொழியில் கணினியுடன் அரட்டை அடிக்கும் செயலி, ஆங்கில மொழி வழியாகத் தமிழ் கற்பிக்க உதவும் தளம், சங்கத் தமிழ்ப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களைத் தேடுதல், சங்கத் தமிழ்ப் பாடல்களை விரைந்து தேடுதல் உள்ளிட்ட செயலிகள், தமிழ் ஒருங்குறி எழுத்துருவினை ரோமன் வடிவ ஆங்கிலத்திற்கும், ஆங்கில ரோமன் வடிவ எழுத்துருவினை தமிழ் ஒருங்குறி எழுத்துருவுக்கும் மாற்றித் தரும் செயலிகள் போன்றவை இணையத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒற்றுப்பிழை மற்றும் சொற்திருத்தி
மிழில் ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பெற்ற உரையில் இடம் பெற்றிருக்கும் ஒற்றுப்பிழை மற்றும் சொற்பிழைகளைத் திருத்தம் செய்வதற்கான செயலி ஒன்று இணையத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த இணையப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் காலிப்பெட்டியினுள் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பெற்ற உரையினை உள்ளீடு செய்து, அதன் கீழிருக்கும் சொற்திருத்தி (ஸ்பெல்செக்) எனுமிடத்தில் சொடுக்கினால், அட்டவணை தோன்றுகிறது. அந்த அட்டவணையில் நாம் உள்ளீடு செய்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கியச் சொற்கள் இடதுபுறமும், வலதுபுறம் அது சரியான சொற்கள் என்பதற்கான குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அட்டவணையின் கீழே பிழைகள் காணவில்லை எனும் குறிப்பும் கிடைக்கிறது. உள்ளீடு செய்த உரையில் பிழைகள் ஏதுமிருக்கும் நிலையில், அதையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இதே போன்று, உள்ளீடு செய்த உரையில் இடம் பெற்றிருக்கும் ஒற்றுப்பிழைகளையும் கண்டறிய முடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் http://spellcheck.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உரையிலிருந்து ஒலிக் கோப்பு
தமிழில் ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பெற்ற உரையினை உள்ளீடு செய்து, அதனைத் தமிழ் ஒலிக் கோப்பாக உருவாக்கும் வகையில் ஓர் இணையப் பக்கம் இருக்கிறது. இங்கு இடம் பெற்றிருக்கும் காலிப்பெட்டி யினுள் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பெற்ற உரையினை உள்ளீடு செய்து, அதன் கீழிருக்கும் ஒலிக்கோப்பை உருவாக்குங்கள் எனுமிடத்தில் சொடுக்கினால், உள்ளீடு செய்த உரை முழுவதும் ஒலிக்கோப்பாக மாற்றப்பட்டு, கீழே தனிக்கோப்பாகக் கிடைக்கும், அதன் கீழுள்ள தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி, அந்தக் கோப்பை ஒலிக் கோப்பாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தமிழ் உரையிலிருந்து ஒலிக் கோப்பு மாற்றுச் செயலியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் http://text2speech.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் ரோபோ தொழில்நுட்பம்
தமிழ் எனும் பெயரிடப்பட்ட சிறிய ரோபோ எந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோ இயந்திரம் வழியாக, என் பெயர் தமிழ் - அறிமுகம், தமிழிடம் ஆத்திசூடி கற்றுக்கொள்ளுங்கள், திசை அறியும் தமிழ், புறம் பாடும் தமிழ், தமிழோடு சங்க இலக்கியங்கள் அறிவோம், தமிழ் மாதங்கள், தமிழுக்கு இணையாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள், தமிழும் சங்கமும், இளநிலை தமிழ்ப் பாடம் - இது என்ன? எனும் தலைப்புகளில் தமிழ் எனும் ரோபோ எந்திரத்தின் செயல்பாடுகள் நிகழ்படக் காட்சிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் ரோபோ தொழில் நுட்பம் குறித்த செய்திகளையும், நிகழ்படத்தினையும் கண்டு மகிழ்ந்திட விரும்புபவர்கள் http://robot.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.
ஆயிதழ் அவினி
ஆயிதழ் அவினி என்பது தமிழில் அரட்டை அடிப்பதற்காக, எலிசா எனும் ஆங்கில வழி நிரலைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட ஓர் இணையச் செயலியாகும். இந்த ஆயிதழ் அவினி இணையப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் காலிப்பெட்டியினுள் தமிழில் ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்படும் வரிகளுக்கேற்ப தமிழில் பதில்கள் கிடைக்கின்றன. தட்டச்சு செய்பவருக்கும், ஆயிதழ் அவினி எனும் தமிழ்க் கணினிக்குமான உரையாடலாக இது இருக்கிறது. ஆயிதழ் அவினி எனும் தமிழ்க் கணினியுடன் உரையாட விரும்புபவர்கள் http://avini.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.
தமிழ் மொழிப் பயிற்சி
தமிழ் மொழிப் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட தளம் இது. இங்கு தமிழைப் பற்றி, தமிழ் எழுத்துகள், தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கணம், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், போன்ற தலைப்புகளில் தமிழ் மொழியினை ஆங்கில வழியில் விளக்கி தமிழை ஆங்கிலம் அறிந்தவர்கள் கற்றுக் கொள்வதற்கான பயிற்சித் தளமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிப் பயிற்சிக்கான தளத்திற்குச் செல்ல http://learn.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.
சங்கத் தமிழ்ப் பாடல்கள்
சங்கத் தமிழ் பாடல்கள் அனைத்தையும் இணையத்தில் தொகுத்து வழங்கப்பட்ட தளமாக இத்தளம் அமைந்திருக்கிறது. இத்தளத்தில் தமிழ்ச் சொல்லை பின்னொட்டுகளாக உள்ளீடு செய்து தேடினால், அச்சொற்களுக்கான விளக்கம் மற்றும் அச்சொல் இடம் பெற்றிருக்கும் சங்கத் தமிழ் பாடல் குறிப்பு ஆகியவற்றுடன் பட்டியலிடப்படுகிறது. இதன் வழியாக சங்கத் தமிழில் அச்சொல் எங்கெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதை எளிதாகக் கணக்கிட்டுக் கொள்ள முடிகிறது. சங்கத் தமிழ் பாடல் தளத்திற்குச் செல்ல http://sangam.tamilnlp.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம். இத்தளத்தில் சங்கப்பாடல்கள் அனைத்தும் தனியாக பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பாடல் தலைப்பின் மேல் சொடுக்கினால், அந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும் பக்கத்திற்குச் செல்கிறது. சங்கப் பாடல் பட்டியல் பக்கத்திற்குச் செல்ல http://sangam.tamilnlp.com/glossing.php எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.
எழுத்துப் பெயர்ப்பு
தமிழ் மொழியிலான உரையினை ஒருங்குறியில் தட்டச்சு செய்து, அதற்கான ஆங்கில மொழியிலான டிரான்ஸிட்ரேஷன் எனப்படும் ரோமன் எழுத்து வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளும் செயலி ஒன்று இணையத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த இணையப்பக்கத்தில் இரண்டு காலிப்பெட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் காலிப்பெட்டியின் கீழ்ப்பகுதியில் தமிழ் ஒருங்குறி எழுத்துகளிலான உரையினை உள்ளீடு செய்து மேல் பெட்டியில், அதற்கான ஆங்கில எழுத்துப் பெயர்ப்பைப் பெறமுடிகிறது. டயாக்ரிடிக் எனும் வடிவ எழுத்துப் பெயர்ப்புப் பக்கத்திற்குச் செல்ல http://sangam.tamilnlp.com/tamil2diacrtics.html எனும் இணைய முகவரியையும், ஐபிஏ டிரான்ஸ்கிரிப்சன் எனும் வடிவ எழுத்துப் பெயர்ப்புக் பக்கத்திற்குச் செல்ல http://sangam.tamilnlp.com/tamil2ipa.html எனும் இணைய முகவரியையும் பயன்படுத்தலாம். இதே போன்று ரோமன் எழுத்துரு வடிவத்திலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்தினைப் பெற, http://sangam.tamilnlp.com/roman2tamil.html எனும் இணைய முகவரியையும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment