உலக செவிலியர் தினம் : மருத்துவத்தின் இதய துடிப்பு செவிலியர்கள் - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 12 مايو 2021

உலக செவிலியர் தினம் : மருத்துவத்தின் இதய துடிப்பு செவிலியர்கள்

மருத்துவ பணிகளில் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள். செவிலியர்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. உலக செவிலியர் அமைப்பு, 1965-ம் ஆண்டில் இருந்து பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகரிய உணர்த்தும் விதமாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடி வருகிறது. 

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது. 

உலகத்தையே தனது கோர பிடிக்குள் வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் ரத்த சொந்தங்களே அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இந்த காலக்கட்டத்தில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடி வருபவர்களில் செவிலியர்களின் பங்கு அளப்பரியதாகும். 

இதை நாம் யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து விடவும் கூடாது. முன்களத்தில் நின்று போராடும் செவிலியர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி தங்களது இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும், செவிலியர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நமது மருத்துவத்தின் உயிர் நாடி என்கிறோம். கொரோனா சிறப்பு பணிகளை சுழற்சி முறைகளில் செவிலியர் முடித்து கொண்டு வீட்டுக்கு போனாலும், தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கக் கூடிய கடினமான சூழ்நிலையை தான் இன்றைய காலக்கட்டதில் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கொரோனா சிறப்பு பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செவிலியர்கள் பலர் தங்களது குழந்தையை கூட கொஞ்ச முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். 

 மருத்துவத்தின் இதய துடிப்பாக இருக்கும், இவர்களது தூய சேவையில், நம்பிக்கையில் இயங்குகிறது உலகம். ஆகையால் இந்த உலக செவிலியர் தின நன்னாளில் நாம் அனைவரும் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வோம். கொரோனா சிறப்பு பணியில் ஈடுபட்டு வரும், கடலூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் அனுசுயா கூறியதாவது:- கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. செவிலியர் தினத்தை விளக்கேற்றி கொண்டாட வேண்டும். 

ஆனால் நாங்கள் விளக்கேற்றாமல் நோயாளிகளின் வாழ்வில் விளக்கேற்றி செவிலியர் தினத்தை கொண்டாடி வருகிறோம். இரவு பகல் பாராமல் வேலை செய்கிறோம். எங்கள் வீட்டில் கணவர், குழந்தைகள், மாமனார், மாமியார் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இருந்த போதிலும், அவர்களையும் கவனித்து விட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து, அவர்களையும் குணப்படுத்தி வருகிறோம். 

 நோயாளிகளை காப்பாற்றுகிறோம் என்ற திருப்தியே எங்களுக்கு போதும். இரவு, பகல் என்று எந்த நேரத்தில் அழைத்தாலும் வந்து பணி செய்கிறோம். பொதுமக்களும் முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் என லேசான அறிகுறி இருந்தால் கூட உடனே ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். 

ليست هناك تعليقات:

إرسال تعليق