என்ஜினீயரிங் படிப்புக்கான நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் வெளியான நிலையில், அதில் சில பிரச்சினைகள் இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.
அதனை கருத்தில் கொண்டு, நவம்பர்-டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு மறுதேர்வாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.
ஏற்கனவே வெளியான தேர்வு முடிவில் திருப்திகரமான மதிப்பெண் இருக்கும் மாணவர்களை தவிர, மற்றவர்களும் தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த முறை தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை ஆப்லைன் மற்றும் பேனா-பேப்பர் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், ஏப்ரல்-மே மாத செமஸ்டர் தேர்வும் அதே முறையில் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, கடந்த நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டருக்கான மறு தேர்வு மற்றும் ஏப்ரல்-மே மாத செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரியர் மாணவர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தொடங்குகிறது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு? எந்தெந்த நாட்களில் தேர்வு? என்பது போன்ற முழு விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment