இன்னும் முடிக்கப்படாமல் உள்ள செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வரும் 28க்குள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேர்ச்சி குறித்த விபரங்களை இறுதி செய்யும் பணிகளில், சி.பி.எஸ்.இ., வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அனைத்து பாடங்களும் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவே நடந்து முடிந்துள்ள நிலையில், செய்முறை பயிற்சி தேர்வுகள் குறித்த பணிகளை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமம் நிலவுகிறது.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும், டில்லியிலிருந்து, சி.பி.எஸ்.இ., சார்பில், அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் செய்முறை பயிற்சி தேர்வு மற்றும் 'இன்டர்னல் அசெசஸ்மென்ட்' பணிகள் முடிக்கப்படாமல் இருந்தால், அவை அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக நடத்தி முடிக்க வேண்டும்.
சில பாடங்களுக்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட நிலையில், அந்த பள்ளி ஆசிரியரே இந்த தேர்வுகளை நடத்தலாம்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. தாங்கள் அளிக்கும் மதிப்பெண் விபரங்களையும், அதற்கென உள்ள இணைப்பில் சென்று பதிவேற்ற வேண்டும். செய்முறை தேர்வு முடிந்ததும், காலதாமதம் ஏதும் இன்றி உடனடியாக மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது சரியான மதிப்பெண்களை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
செய்முறை பயிற்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை, அனைத்து பள்ளிகளும், வரும் 28க்குள் இறுதி செய்து, அதற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment