பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (புதன்கிழமை) இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 மாநில வாரிய பொதுத்தேர்வு நடத்தப்படுமா? நடத்தப்படாதா? என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடையே எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்க, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கருத்துகள்
கொரோனா தொற்று காரணமாக 2020-21-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வருகிற 7-ந்தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை இணையவழியாக இன்று (வியாழக்கிழமை) தொடர்பு கொண்டு கேட்டறிந்து, அதன் அறிக்கையை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிடத்தக்க வகையில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை ஆசிரியர்கள் மூலமாக பள்ளி சார்ந்த மாணவர்கள், பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்து அதன் விவரத்தை தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق