மகனின் படிப்புச் செலவுக்காக வளர்த்த இரு கன்றுக் குட்டிகளை விற்று கரோனா நிவாரண நிதி வழங்கிய பார்வைக் குறைபாடு மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கே சென்ற மாவட்ட ஆட்சியர், அவருக்கு நிதியுதவி வழங்கினார்
தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கா.ரவிச்சந்திரன் (52), 100 நாள் வேலை செய்து வருகிறார்.
அதில் வரக்கூடிய சம்பளம், மாற்றுத்திறனாளிக்கான மாதந்தோறும் கிடைக்கும் உதவித்தொகை ரூ.1,000 இந்த சொற்ப வருமானமே அவரது குடும்பத்துக்கான ஆதாரம்
இதற்கிடையே தன் இளைய மகனைக் கல்லூரியில் சேர்க்க, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
இச்சூழலில் சிறிதும் யோசிக்காமல் மகனின் படிப்புச் செலவுக்காக வாங்கிய இரண்டு கன்றுக் குட்டிகளையும் விற்றுக் கிடைத்த பணம் ரூ.6 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் வழங்கினார்.
நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ரவிச்சந்திரனின் செயலை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த செய்தி இந்து தமிழ் திசை இணையதளத்தில் அன்றைய தினமே வெளியானது.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுரையின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் இன்று காலை ஆழிவாய்க்காலில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டுக்கே நேரில் சென்று அவருக்குக் கறவை மாடு வாங்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது ரவிச்சந்திரன், 'இந்த நிதியெல்லாம் வேண்டாம், நான் இதை எதிர்பார்க்கவில்லை' என மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளார். அதற்கு ஆட்சியர், ''உங்களைப் போன்றவர்களை அரசு சார்பில், இப்படித்தான் கவுரவப்படுத்த முடியும், எனவே இந்த நிதியைக் கொண்டு மகனின் படிப்புச் செலவு, குடும்ப வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி காசோலையை வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் வேலுமணி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பார்வதி சிவசங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment