தேசிய அளவில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகளுக்கு, தகுதி வாய்ந்த, இதுவரை அடையாளம் காணப்படாத சாதனையாளர்களை கண்டறிய, மாநிலங்கள் அளவிலான சிறப்பு தேடல் குழுவை நியமிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய குடிமக்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள், மத்திய அரசால் வழங்கப்படுகின்றன; இவை, தேசிய அளவில் உயரிய விருதாக கருதப்படுகின்றன.
சாதனை
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், மக்கள் விவகாரம், குடிமைப் பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் இந்த விருதுகளை ஆண்டுதோறும் அளித்து, மத்திய அரசு கவுரவிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவுக்கு முந்தைய தினம், விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவர்களை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், அதில் தகுதி யானவர்களை மத்திய அரசு தேர்வு செய்து, விருது களை அறிவிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், இதுவரை அடையாளம் காணப்படாத, அதே நேரம் தங்கள் துறையில் சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, புகழ் வெளிச்சத்துக்குள் வராத, தகுதி வாய்ந்த சாதனையாளர்களை கண்டறிய, புதிய முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது; அதன் விபரம்:வரும் 2022ம் ஆண்டு, குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை, மத்திய அரசின் www.padmaawards.gov.in என்ற இணையதளம் வாயிலாக, ஜூன் 1 முதல், செப்., 15 வரை பரிந்துரை செய்யலாம்.
வழக்கமாக, தங்கள் துறைகளில் குறிப் பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந் துரைக்கப்படுகின்றனர்.ஆனால் விளம்பரமே இல்லாமல், புகழ் வெளிச்சத்துக்குள் வர விரும்பாமல், அமைதியான முறையில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தி வரும் மனிதர்கள், நம் நாட்டில் ஏராளமானோர் உள்ளனர்.அவர்களை கண்டறிந்து கவுரவிப்பது அரசின் கடமை. எனவே, அது போன்ற நபர்களை அடையாளம் காண, சிறப்பு தேடல் குழுவை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உருவாக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நபர்
வரும் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு, அதுபோன்ற நபர்களை பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபரின் வாழ்நாள் சாதனைகளின் அடிப்படையில், அவர் பத்ம விருதுகளை பெற தகுதிஉடையவர் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்.விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நபரின் சாதனைகளில், பொதுச் சேவை ஒரு கூறாக இருப்பது, விரும்பத்தக்க காரணியாக இருக்கும். பரிந்துரைக்கப்படும் நபர், ஏற்கனவே தேசிய அல்லது மாநில விருதுகளை பெற்றுள்ளாரா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அதே நேரம், மிக தகுதி வாய்ந்த நபராக இருப்பின், அவர் இறந்து ஓர் ஆண்டு நிறைவடையாத நிலையில், அவர் பெயரை பரிந்துரைக்கலாம்.பத்ம ஸ்ரீ விருது வாங்கிய நபரை, அதைவிட உயரிய விருதுக்கு பரிந்துரைக்க, குறைந்தது ஐந்து ஆண்டுகள் இடைவெளி அவசியம். இருப்பினும் தகுதி உடைய, விதிவிலக்கான நபர்களுக்கு அதில் தளர்வுகள் அளிக்கலாம்.பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்படாது. டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment