தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் மே மாதம் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன.
கடந்த ஆண்டு மே மாதத்தில் சத்துணவு வழங்க முடியாத நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் உயர் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கும் உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வழங்க அரசு ஆணை பிறப்பித்தது.
இதுகுறித்து அரசுக்கு சமூகநலன் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த ஆண்டும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் 10 முட்டைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது கொரோனா பரவல் தொடர்பான ஊரடங்கு உத்தரவினால் இந்த மாதமும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே சத்துணவு அளிக்க முடியாததை தொடர்ந்து, மதிய உணவு திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு 3,100 கிராம் அரிசியும், 1,196 கிராம் பருப்பும், 10 முட்டையும் வழங்கப்பட வேண்டும். உயர் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு 4,650 கிராம் அரிசியும், 1,252 கிராம் பருப்பும், 10 முட்டையும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment