குடும்ப ஓய்வூதியம் ஒரு மாதத்தில் கிடைப்பதை உறுதி செய்யவும்: அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு
அரசு ஊழியரின் மறைவுக்குப் பிறகு அவா்களின் குடும்பத்தினா் விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால், மத்திய அரசு ஊழியா்கள் பலா் உயிரிழந்தனா். பல நேரங்களில், உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே, உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
MOST READ
இதற்காக, மத்திய அரசின் அனைத்து துறைகளும் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்ப வாரிசு விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னா் அங்கிருந்து, குடும்ப வாரிசுகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு உயிரிழந்த அரசு ஊழியா்களின் விவரம், அவா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாள், தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், தாமதத்தை தவிா்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் போன்றவற்றை அரசின் அனைத்து துறைகளும் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment