ஆதரவற்ற, கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் 40 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்த, ஆதரவற்ற 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி நலனுக்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2013-14) 110 மனுக்கள் வரப் பெற்றிருந்தன. அவற்றின் மீது பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான 40 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், முதல் மாதத்துக்கான காசோலையும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அப்போது ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறியது:
சமுதாயத்தில் தாய், தந்தையரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள், கொடிய நோய்களான தொழுநோய், புற்றுநோய், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களது கல்வி இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து கல்வி பயின்று சமூகத்தில் சக மாணவர்களுடன் இணைந்து வாழ வழிவகை செய்யவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, பள்ளி படிப்புச் சான்று, தாய், தந்தை இல்லை என்பதற்கான சான்று, தொழுநோய், புற்றுநோய், ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டதற்கான சான்று ஆகியவற்றுடன் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியான குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் மாத உதவித்தொகையை நிகழாண்டு முதல் ரூ.2000ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகை பெற தகுதியான குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயன் பெற வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் க.செங்கோட்டையன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், நிதி ஆதரவு, குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு உறுப்பினர்கள் ஜெயபால் சுந்தர்சிங், பீட்டர், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment