மலைவாழ் பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் எடுத்து அசத்தும் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி 
╰•★★ Join Our WhatsApp ★★•╯ 


வெளியுலகில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், ஆங்கில மொழி புரிதல் இல்லாமல் அவர்கள் வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன் கொரோனா ஊரடங்கின் போது தன்னுடைய மலைக் கிராமத்தில் வாழ்ந்து வரும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் வகுப்புகள் எடுத்து வருகிறார் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரியான சந்தியா. 

கோவை மாவட்டம், மதுக்கரைக்கு அருகே, கேரள – தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சின்னாம்பதி என்ற மலைக் கிராமம். இருளர் பழங்குடிகள் வசித்து வரும் இந்த பகுதியில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 7 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறார் 20 வயதான சந்தியா சண்முகம். அவரின் இந்த பொறுப்பான பணி குறித்து அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை தொடர்பு கொண்டது. இந்த பகுதியில் சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. 


காலையில் ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து. மாலையில் இந்த பேருந்தை தவறவிட்டால், பிரதான சாலையில் இருந்து 7 கி.மீ. வனத்தின் நடுவே நடந்து வர வேண்டிய சூழல் ஏற்படும். போக்குவரத்து பிரச்சனையை காரணமாக கொண்டே பலரும் இந்த பகுதியில் படிக்க பள்ளிக்கூடங்களுக்கு செல்வதில்லை. கொரோனா தொற்று வேறு அதிகமாக பரவி, பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. இதனை காரணமாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று யோசித்தேன். 


பிறகு நானே இவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்” என்று கூறுகிறார் சந்தியா சின்னாம்பதி மலைக் கிராமத்தில் பழங்குடி குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. 5-ஆம் வகுப்பு வரை இங்கே படிக்கும் குழந்தைகள் 10-ஆம் வகுப்பு வரை படிக்க 10 கி.மீக்கு அப்பால் அமைந்துள்ள மாவுத்தாம்பதி பஞ்சாயத்திற்கு தான் செல்ல வேண்டும். 12-ஆம் வகுப்பு படிக்க 25 கி.மீக்கு அப்பால் உள்ள குனியமுத்தூர் தான் இவர்களின் ஒரே தேர்வாக உள்ளது. பேருந்து வசதிகள் ஒரு புறம் இருக்க, வனத்தை ஒட்டி இருப்பதால் இங்கே போதுமான தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லை. 

நகரத்தில் வாழும் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் இந்த வசதி, ஆன்லைன் வகுப்புகளுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால், இந்த குழந்தைகளுக்கு ஆஃப்லைன் கல்வி, தொலைத்தொடர்பு பிரச்சனையால், கட்டாயத் தேவையாக மாறிவிட்டது. காலையில் 8 மணிக்கு வகுப்புகள் ஆரம்பித்தால் 1 மணி வரை தொடரும். பிறகு மதிய உணவு இடைவேளை 1 மணி நேரம் விடப்பட்டு பிறகு 3 மணி வரை பள்ளிக் கல்வியும், இதர அடிப்படை வகுப்புகளையும் நான் எடுக்கின்றேன். 

மேற்கொண்டு புதிதாக கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தைகள் மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை இங்கே வந்து படிப்பார்கள் என்றார் சந்தியா கிராமத்துக்கு பொதுவான ஓர் அறை மட்டுமே கொண்ட கட்டிடம் ஒன்றிலும், மர நிழலில் தார்ப்பாய் விரித்தும் குழந்தைகள் அமர்ந்திருக்க இவர்களுக்கு பாடம் எடுத்து வரும் சந்தியா இந்த ஆண்டு தான், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். முதல் அலையின் கோரம் கொஞ்சம் குறைய துவங்கிய நிலையில், “ப்ளேஸ்மெண்ட்டில்” தனக்கு கிடைத்த பணியை தொடர திருப்பூர் சென்றார். மூன்று மாதங்கள் பணியாற்றிய நிலையில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்த அவர் புதிய பொறுப்பை கையில் எடுத்துள்ளார். 


 எங்கள் பள்ளியில் மொத்தம் 17 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கல்விக்கான பாடப்புத்தகங்கள் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. அந்த புத்தகங்களை வைத்து தான் பாடங்களை படித்து வருகின்றனர். புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் வந்துவிட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சின்னாம்பதி ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திர குமார் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். 

சின்னாம்பதியில் மொத்தம் 58 வீடுகளும் 300 பேரும் தான் இருக்கின்றோம். அனைவரும் உறவினர்கள், நண்பர்கள், நெருங்கிய சொந்தங்களாக வாழ்ந்து வருகின்றனர். நான் வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கின்றேன் என்று கூறிய போது என்னுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்களும் இந்த வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தயார் செய்து அனுப்புவது போல தினமும், மதிய உணவெல்லாம் கட்டி தங்களின் குழந்தைகளை இந்த குட்டி பள்ளிக்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கிவிட்டனர். 

ஆனால் நோட்டுகள், பேனா பென்சில்கள் போன்ற இதர உபகரணங்கள் கிடைக்காமல் இக்குழந்தைகள் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்றார் சந்தியா. ஆரம்பம் முதலே இங்கு தொடர்ச்சியான பேருந்து போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஆளுங்கட்சியை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். 

இம்முறை இதனை தலைமைச் செயலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். நிச்சயமாக இந்த மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் கிடைத்துவிடும் என்று கூறுகிறார் சி.பி.ஐ.எம்.எல். (ரெட் ஸ்டார்) கட்சியின் மாநில செயலாளர் கே.பி. சுதிர். இங்கு வாழும் பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் இவர், “பிரதான சாலையில் இருந்து அந்த கிராமம் 7 கி.மீக்கு அப்பால் உள்ளது. உள்ளே செல்ல செல்ல வனம் தான். யானைகளும், சிறுத்தைகளும் (Leopard), கரடிகளும் நடமாடும் பகுதி. குழந்தைகள் பள்ளி செல்வது, இந்த போக்குவரத்தால் தடையானது. 

அதை சரி செய்ய இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது சந்தியாவின் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து “ஸ்டேஸ்னரி” உபகரணங்களையும், கரும்பலகையையும் நாங்கள் விரைவில் வழங்க இருக்கின்றோம். அதே போன்று அவரின் குட்டி பள்ளிக்கு தேவையான தரை மற்றும் கான்க்ரீட் கூரை வசதி உடனே ஏற்படுத்தி தர உள்ளோம் என்று கூறினார். இந்த மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும். வெளியுலகில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், ஆங்கில மொழி புரிதல் இல்லாமல் அவர்கள் வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார் சந்தியா.

Post a Comment

Previous Post Next Post

Search here!