இன்னும் 17 நாட்களில்... ஒலிம்பிக் தோன்றிய வரலாறு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 6 July 2021

இன்னும் 17 நாட்களில்... ஒலிம்பிக் தோன்றிய வரலாறு

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் உச்சபட்ச கனவான ஒலிம்பிக்குக்கு நிகரான விளையாட்டு போட்டி உலகில் வேறு எதுவும் கிடையாது என்றால் மிகையாகாது. உலகையே ஒற்றுமை என்னும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் சர்வ வல்லமை படைத்த ஒலிம்பிக் போட்டி தோன்றி பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன.


 ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கிரேக்கம் (கிரீஸ்) என்னும் சிறிய நாட்டில் தான் பண்டைய ஒலிம்பிக் பிறந்தது. கிரேக்கர்களின் மதச்சடங்கு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான் இந்த போட்டி அரங்கேறியது. கிரேக்க கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்கும் ‘ஜீயஸ்’ புகழை பரப்பும் விழாவாக இது கொண்டாடப்பட்டது. முதலாவது ஒலிம்பிக் விழா கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 776-ம் ஆண்டில் கிரீசில் உள்ள இயற்கை வளம் மிகுந்த நகரான ஒலிம்பியாவில் நடந்தது. இந்த மத திருவிழா ஒலிம்பியா நகரில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. 


இந்த ஒலிம்பிக் விழாவில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் கலந்து கொள்ள வருகை புரிவதற்கு வசதியாக அந்த சமயத்தில் கிரேக்க நகரங்களுக்கு இடையே போர் நிறுத்த உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டு இருக்கும். யுத்தத்துக்கு தயாராகுவதற்கு உதவக்கூடிய ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த காலத்தில் போர் குறித்த தகவல்களை விரைந்து சென்று சொல்ல வேண்டிய நிலை இருந்ததால் மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போட்டிகளில் வெல்பவர்களுக்கு வெற்றி வீரர் என்ற பட்டத்துடன் ஆலிவ் மரக்கிளையால் ஆன கிரீடமும் சூட்டப்பட்டது. 

 புராதன காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வினோதமாக இருந்தன. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக தான் பங்கேற்க முடியும். காலணிகளும் அணியக்கூடாது. கிரேக்கர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. பெண்களுக்கு பங்கேற்க மட்டுமின்றி, பார்க்க கூட தடை போடப்பட்டு இருந்தது. அதனை மீறினால் மரண தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. கிரேக்கர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட ஒலிம்பிக் போட்டிக்கு ரோமானியர்களின் படையெடுப்பால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. 

ரோமானியர்களின் படையெடுப்பால் பொலிவை இழந்து தத்தளித்த ஒலிம்பிக் போட்டிக்கு கி.பி.393-ம் ஆண்டில் ரோமானிய பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தடை விதித்தார். அவருக்கு பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்ற அவருடைய மகன் இரண்டாம் தியோடோசியஸ் உத்தரவின் பேரில் ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள் இடித்து தள்ளப்பட்டு தவிடிபொடியாக்கப்பட்டன. ஒலிம்பிக்கை எல்லோரும் மறந்து போன நிலையில் 1,400 வருடங்களுக்கு பிறகு அந்த பழமையான போட்டிக்கு பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான பியாரே டி கோபர்ட்டின் புத்துயிர் ஊட்டினார். ஒலிம்பிக்கின் மகத்துவத்தை அலசி ஆராய்ந்து அதனை நவீன ஒலிம்பிக் போட்டியாக புதுப்பித்தார். இடைவிடாத முயற்சியால் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்று திரட்டி 1894-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டின் தாயகமான கிரீஸ் நாட்டில் நவீன ஒலிம்பிக்கின் முதலாவது போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் ‘நவீன ஒலிம்பிக்கின் தந்தை’ என்று கோபர்ட்டின் போற்றப்பட்டார். 

 முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்சில் ஏப்ரல் 6-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நடந்தது. இதில் டென்னிஸ், நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், சைக்கிளிங், பளுதூக்குதல், மல்யுத்தம், வாள்சண்டை ஆகிய 9 பந்தயங்கள் நடத்தப்பட்டன. 14 நாடுகளை சேர்ந்த 241 வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் பெண்களுக்கு போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. 1900-ம் ஆண்டு பாரீசில் (பிரான்ஸ்) நடந்த 2-வது ஒலிம்பிக்கில் பெண்களுக்கான போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 

நவீன ஒலிம்பிக் நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி பீடு நடைபோடுவதுடன், இந்த போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையும், பந்தயங்களும் பரிணாம வளர்ச்சி கண்டன. தற்போது ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்கும் நாடுகளுக்கு ஓட்டெடுப்பு நடத்தி உரிமத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்குகிறது. ஒலிம்பிக் போட்டி பிறந்த கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பல நாடுகள் வழியாக கடந்து போட்டியை நடத்தும் நாட்டுக்கு வந்தடைவதுடன், தொடக்க விழா நடைபெறும் நாளில் ஸ்டேடியத்துக்கு தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்டு ஏற்றி வைக்கப்படும் பழக்கம் 1936-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. 

போட்டி முடியும் வரை அந்த தீபம் அணையாத வகையில் காக்கப்படுகிறது. உலக போர் காரணமாக 1916, 1940, 1944-ம் ஆண்டுகளில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி கடும் சவாலுக்கு மத்தியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த மாதத்தில் தொடங்குகிறது.

No comments:

Post a Comment