தமிழக முதல்வர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ இன்று துவக்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” விழாவில் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (20.7.2021), தொழில்துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக, 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் போது, தமிழக முதல்வர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார். தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த டிஜிட்டல் ஆக்ஸலேட்டர் திட்டம் மூலம், தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அனுமதி உத்தரவுகளை, முதல்வர் ஸ்டாலின், ஐந்து நிறுவனங்களுக்கு வழங்கினார்
மேலும், உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:- 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடிக்கல் நாட்டுதல்: இந்நிகழ்ச்சியின்போது, முதல்வர் ஸ்டாலின் 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
புதிய திட்டங்களைத் துவக்கி வைத்தல்: தமிழக முதல்வர் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 5 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தொழில்துறை சிறப்புச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Search here!
Tuesday, 20 July 2021
New
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
CM ANNOUNCEMENT
Tags
CM ANNOUNCEMENT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment