மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
நிறுத்திவைப்பு
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி என 3 தடவை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
அதனால், இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன், மேற்கண்ட 3 தவணைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்தநிலையில், மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, 3 தவணை அகவிலைப்படி உயர்வையும், ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
11 சதவீத உயர்வு
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும், அகவிலை நிவாரண தொகையும் 3 தவணைகளையும் சேர்த்து 11 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால், ஏற்கனவே 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்கிறது.
நிலுவைத்தொகை கிடையாது
ஜூலை 1-ந் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதனால், 48 லட்சத்து 34 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்து 26 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.
அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.34 ஆயிரத்து 401 கோடி செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரையிலான காலத்துக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை (அரியர்) எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
வரி தள்ளுபடி
கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பொருட்கள் துறை திட்டங்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைப்பது என்று பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.54 ஆயிரத்து 618 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக சிறப்பு கால்நடை தொகுப்பு திட்டம் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில், மத்திய அரசு தனது பங்காக ரூ.9 ஆயிரத்து 800 கோடி செலுத்தும்.
துணி ஏற்றுமதியாளர்கள், துணி ஏற்றுமதிக்கு மத்திய, மாநில வரிகளில் தள்ளுபடி பெறும் சலுகையை 2024-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீ்ட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம் துணி ஏற்றுமதியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (ஓ.பி.சி.) உள்ள சாதிகளை வகைப்படுத்துவது பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை இந்த ஆணையத்துக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது, 11-வது பதவி நீட்டிப்பு ஆகும்.
தேசிய ஆயுஷ் திட்டத்தை மத்திய நிதியுதவி பெற்ற திட்டமாக மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த 5 ஆண்டு காலத்தில், ரூ.4 ஆயிரத்து 607 கோடி செலவில் பாரம்பரிய மருத்துவ முறை கட்டமைப்புகள் தரம் உயர்த்தப்படும்.
சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறையில் ஒத்துழைப்புக்காக டென்மார்க் சுகாதார அமைச்சகத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
நீதித்துறை உள்கட்டமைப்பு
நாட்டில் இ்ன்னும் நிறைய கோர்ட்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், நீதித்துறை உள்கட்டமைப்புகளை பெருக்கும் மத்திய அரசின் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
மேலும், கிராம மக்களுக்கு நீதி வழங்கும் கிராம நியாயாலயங்களை ஆதரிக்கும் வகையில், அவற்றுக்கு 5 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Search here!
Thursday 15 July 2021
New
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Dearness Allowance (DA)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment