8 லட்சத்து 6 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகளுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நாளைமறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு ரத்து
கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த கல்வியாண்டு முடிந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த கல்வியாண்டில் (2020-21) மாணவ-மாணவிகளின் நலன் கருதி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது.
இதில் பிளஸ்-2 மதிப்பெண் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால், அந்த பொதுத் தேர்வுக்கு மட்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மதிப்பெண் கணக்கிடும் பணி
அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வில் 30 சதவீதமும் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகளில் அரசு தேர்வுத் துறையும், கல்வித் துறையும் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அரசு அறிவித்தபடி, ஒவ்வொரு மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு மதிப்பெண், பிளஸ்-2 வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் பெறப்பட்டு 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டன.
அந்தவகையில் இந்த பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், இந்த மதிப்பெண்களை கணினியில் பதிவிடும் பணி, கடந்த 2 நாட்களாக நடந்து வந்தன. இதற்கிடையில் பிளஸ்-2 வகுப்பு முடிவு 15-ந்தேதி (நேற்று) வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தேர்வு முடிவு
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்ட போது, ‘பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் இருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் சொல்லும் நாளில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும்' தெரிவித்தார்.
இந்தநிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதிலும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு குறித்து பேசப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலையில் அரசு தேர்வுகள் இயக்ககம், பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாளை மறுதினம் வெளியீடு
பள்ளிக்கல்வி துறையின் ஆணையின்படி, 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.inஎன்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல்
மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
8 லட்சம் மாணவ-மாணவிகள்
பொதுத் தேர்வு நடத்தப்படாத காரணத்தினால் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் புள்ளி விவரத்தின் படி, மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Search here!
Saturday 17 July 2021
New
8 லட்சம் மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு 22-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Public Exam
Tags
Public Exam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment