“அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்” மாண்புமிகு முதலமைச்சர் - EDUNTZ

Latest

Search here!

Tuesday 13 July 2021

“அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்” மாண்புமிகு முதலமைச்சர்

செய்தி வெளியீடு எண்:439 நாள்:13.07.2021 செய்தி வெளியீடு 

“அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்” பொதுப்பணித் துறை ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தல். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் உரிய காலத்தில் கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நினைவகம் ஆகியவற்றை அமைப்பது குறித்தும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள சென்னை, வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, அங்கு ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வன மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காக கட்டப்படும் கட்டடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். 

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ் வைப்பக கட்டட வளாகம் மற்றும் பல்வேறு பாரம்பரியக் கட்டடங்களைப் புனரமைப்பு செய்யும் பணிகள் இவற்றின் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்தும், புதிதாக கட்டப்பட்டுவரும் 6 மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களின் பணி முன்னேற்றம், நீதிமன்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்காக கட்டப்படும் கட்டடங்களின் பணி முன்னேற்றம் சேலம் மாவட்டம், தலைவாசலில் கட்டப்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து அரசுக் கட்டடங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடித்திட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

இக்கூட்டத்தில், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை தலைமை முதன்மைப் பொறியாளர் திரு.ஆர்.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர் 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9





No comments:

Post a Comment