முதல்வரின் கேள்விகளுக்கு பதில் சொல்வது சவாலாக இருக்கிறது! - வியக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 30 July 2021

முதல்வரின் கேள்விகளுக்கு பதில் சொல்வது சவாலாக இருக்கிறது! - வியக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

தி.மு.க அமைச்சரவையில் இளையவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது பரபரப்பான செயல்பாடுகளால் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறார். 




அண்மையில், ‘எழுத்தறிவு இயக்க’ தொடக்கவிழாவில், பாட்டி ஒருவருக்கு சிலேட்டில் பெயர் எழுதச் சொல்லித்தரும் அவரின் ‘எம்.ஜி.ஆர் ஸ்டைல்’ புகைப்படங்கள் இணையத்தில் வைரல். அதிலிருந்தே பேச்சை ஆரம்பித்தோம்... ‘‘நம் மாநிலத்திலும் இப்போதும்கூட கல்வியறிவு பெறாத நிலையில் சுமார் ஒரு கோடிப் பேர்வரை வாழ்ந்துவருகிறார்கள். தன் பெயரைக்கூடக் கையெழுத்திடத் தெரியாத இவர்கள், சில சமயங்களில் சொந்தக் குடும்பத்தினராலேயே சொத்து விஷயங்களில் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையிலுள்ள மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சூழலை மாற்றியமைக்க வேண்டும் என நினைத்தேன். இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் எழுத்தறிவு இயக்கம்” என்றவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்... ‘‘தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கிப் படையெடுத்துவரும் இந்த நேரத்தில், ‘அரசுப் பள்ளி மாணவர்கள் 15 லட்சம் பேர் தனியார் பள்ளிகளுக்குச் சென்றிருப்பதாக’க் கூறியிருக்கிறீர்களே... எப்படி?’’ ‘‘கடந்த 10 ஆண்டுக்காலத்தில், அரசுப் பள்ளி மாணவர்களில் சுமார் 15 லட்சம் பேர் தனியார் பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். முறையாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் இந்தத் தகவலைச் சொல்கிறேன். அதேசமயம், இந்தக் கல்வியாண்டில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான தேதி வரையில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,08,000 மாணவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.’’ ‘‘ஒரு பள்ளியில் நல்ல தேர்ச்சி விகிதம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் வந்து சேருவார்கள். புதிய அரசு பதவி ஏற்றிருக்கும் இந்த நேரத்தில், பள்ளிப் பாடத்திட்டங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையிலும் நிறைய பேர் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள். இதுதவிர, இந்த கொரோனா காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களும் நிறைய பேர் அரசுப் பள்ளிகளில் வந்து சேருகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், அரசுப் பள்ளிமீது நம்பிக்கை வைத்து வருகிற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் தலையாய இலக்கு. எனவே, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி உள்ளிட்ட பள்ளியின் கட்டமைப்புகளில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களையும் மேம்படுத்துவதற்கான செக் லிஸ்ட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது உட்பட இதற்கான பணிகள் அனைத்தையும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே ஒவ்வொன்றாகச் செய்து முடித்துவிடுவோம்... நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்!’’ ‘‘பள்ளிக்கல்வித்துறை நடைமுறையில் இருந்துவந்த ‘இயக்குநர் பதவி’யைத் திடீரென ரத்துசெய்துவிட்டு, அதற்கு பதிலாக ஆணையரை நியமனம் செய்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?’’ ‘‘பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு பதிலாக ஆணையரை நியமனம் செய்வதென்பது கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே கொண்டுவரப்பட்டதுதான். அதைப் பின்பற்றித்தான் நாங்களும் இப்போது நியமனம் செய்திருக்கிறோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளில் பயின்றுவரும் நம்முடைய குழந்தைகள்தான். எனவே, கால மாற்றத்துக்கு ஏற்ப குழந்தைகளைப் பயிற்றுவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, பள்ளிக்கல்வித்துறையிடம் இருக்கிறது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், எந்தவித மேம்படுத்துதல்களும் இன்றி அப்படியே தேங்கி நின்றுவிட்டன. இந்தக் குறைகளையெல்லாம் சரிசெய்து, வழக்கமான பள்ளிக்கூடம் - யூனிஃபார்ம் - பாடத்திட்டம் என்றில்லாமல், புதிதாக, ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்துபார்க்க எண்ணினோம். இதற்கெல்லாம் ஆணையர் நியமனம் என்பது அவசியமாக இருக்கிறது.’’ ‘‘ஆனால், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நியமன விவகாரத்தில், உங்கள் கூட்டணிக் கட்சியான ம.தி.முக., வி.சி.க-வேகூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனவே..?” ‘‘கூட்டணிக் கட்சியினர் அவர்களுடைய சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்தான். அதேசமயம், ஆசிரியர் கி.வீரமணி, ‘பள்ளிக்கல்வித்துறை இப்போது நல்லபடியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியே கொண்டு செல்லுங்கள். முதல்வரும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். எனவே, எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வித்துறையை அடுத்த நிலைக்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.’’ ‘‘கட்சிக்கு அப்பாற்பட்டு, உங்கள் துறைசார்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ ‘‘பள்ளிக்கல்வித்துறை சார்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் நாங்கள் முதல்வரோடு கலந்துகொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் தன்னை ஒரு மாணவனாக நினைத்துக்கொண்டு எங்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். சில சமயங்களில் தன்னை ஓர் ஆசிரியர் இடத்தில் நிறுத்திக்கொண்டு கேள்வி கேட்கிறார். இன்னும் சில இடங்களில் பெற்றோர் தரப்பில் நின்றுகொண்டு எங்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார். இப்படி அவரின் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.’’

No comments:

Post a Comment