மத்திய அரசுப்பணி மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நெறிமுறைகளை கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கையாக வழங்கியுள்ளது.
வளமான பிரிவு நீக்கம்
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் 27 சதவீத இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) வளமான பிரிவினரை (கிரிமிலேயர்) நீக்கி வழங்கப்படுகிறது.
தமிழகத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலுக்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சேர்க்கக்கூடாத வருமானம்
வளமான பிரிவினரை நீக்குவதற்காக, நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும்போது, பெற்றோரின் ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என்று வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலதாமதம் கூடாது
மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓ.பி.சி. வகுப்பினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கும்படி கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்றாலும், அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதில் பிரச்சினை இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் பயன்பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. ரூ.8 லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும்போது ஊதியம் மற்றும் விவசாயத்தில் இருந்து பெறும் வருமானத்தை கணக்கில் எடுக்கக்கூடாது.
மேலும், ஓ.பி.சி. வகுப்பினரின் சாதி சான்றுகளை காலதாமதம் இல்லாமல் வழங்க அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
யார் யாருக்கு வழங்கலாம்?
ஊதிய வருமானம் ரூ.3 லட்சம், வேளாண்மை வருமானம் ரூ.4 லட்சம், இதர வகை வருமானம் ரூ.3 லட்சம் என்று பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால், ஊதிய வருமானத்தையும், வேளாண்மை வருமானத்தையும் நீக்கிவிட்டு ரூ.3 லட்சம் என்பதையே வருமானமாக கணக்கில் கொண்டு ஓ.பி.சி. சான்றிதழ் வழங்க வேண்டும்.
பெற்றோரின் ஊதிய ஆண்டு வருமானம் ரூ.25 லட்சம் என்றும், அதே நேரத்தில் மற்ற வருமானங்கள் இல்லை என்ற பட்சத்திலும் அவர்களுக்கு ஓ.பி.சி. சான்றிதழை வழங்கலாம்.
யாருக்கு வழங்கக்கூடாது?
பெற்றோருக்கு வேளாண்மை ஆண்டு வருமானம் ரூ.50 லட்சமாக இருந்து மற்ற வருமானங்கள் இல்லை என்றாலும், ஓ.பி.சி. சான்றிதழை வழங்க வேண்டும்.
ஆண்டு ஊதிய வருமானம் ரூ.4 லட்சம், வேளாண்மை வருமானம் ரூ.3 லட்சம், இதர வகை வருமானம் ரூ.8.10 லட்சம் என்றிருக்கும் பட்சத்தில், ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை தவிர்த்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓ.பி.சி. சான்றிதழை வழங்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search here!
Wednesday, 21 July 2021
New
மத்திய அரசுப்பணி, கல்வி நிறுவனங்களில் சேர ஓ.பி.சி. வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நெறிமுறைகள்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
General News
Tags
General News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment