கையடக்க கணினி மைய செயலாக்க கருவியை (சி.பி.யூ.) உருவாக்கிய திருவாரூரை சேர்ந்த பள்ளி மாணவன் எஸ்.எஸ்.மாதவ்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
பாராட்டு
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம் கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ். 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான ஜாவா போன்றவைகளை படித்துள்ளார்.
இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாதநிலையில் கையடக்க கணினி மைய செயலாக்க கருவி (சி.பி.யூ.) கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக 2 ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து வெற்றிபெற்றுள்ளார் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விப்பட்டார். இதையடுத்து அவர், மாணவன் எஸ்.எஸ். மாதவ்வை சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
அரசு உதவி
இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக ‘Terabyte India CPU Manufacturing Company’ என்ற நிறுவனத்தை தொடங்கி, இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட்டறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவனை வாழ்த்தினார்.
மாணவனின் கணினி தொடர்பான உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும், தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். அப்போது மாணவன் எஸ்.எஸ்.மாதவ்வின் பெற்றோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment