தினம் ஒரு தகவல் : தூக்கம் கண்களை தழுவ...! - EDUNTZ

Latest

Search here!

Thursday 15 July 2021

தினம் ஒரு தகவல் : தூக்கம் கண்களை தழுவ...!

தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மன அழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்க சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது. எனவே தூக்கம் கண்களை தழுவ சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம். நீண்ட ஓய்வில்லா நாளின் இறுதியில் சூடான நீரில் குளியல் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நிம்மதி அளிப்பதுடன், உறக்கத்தை வரவழைக்கவும் உதவுகிறது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சூடான நீரில் குளிக்கலாம். உடலையும், மனதையும் அமைதி அடையச் செய்ய மசாஜ் சிறந்த சிகிச்சை ஆகும். இரவு நேரத்தில் மசாஜ் செய்வதால், வலி குறைந்து, பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆழ்ந்த தூக்கமும் வரும். இதற்காக பயிற்சி பெற்றவர்களை அழைக்க வேண்டும் என்றில்லை. நீங்களாகவே வீட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். உணர்வுகளை தூண்டி, சிறந்த தூக்கம் அளிக்க லாவெண்டர் ஆயில் உதவுகிறது. பாலும், தேனும் சேர்ந்த கலவை தூக்கத்தை வரவழைக்க சிறப்பான மருந்து. பாலில் அமினோ அமிலம், டிரிப்டோபான் உள்ளது. இது ஹார்மோன் அளவை அதிகரித்து, இயற்கையான உத்வேகம் அளிக்கிறது. இரவில் தூங்க செல்லும் முன், கொஞ்சம் மூலிகை டீ எடுத்துக் கொண்டால் தானாக தூக்கம் வரும். இது உடலை சாந்தமடைய செய்கிறது. மேலும் பேஷன்பிளவர் டீ மற்றும் சமோமைல் டீ போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தாது மக்னீசியம் ஆகும். இது உடல் தசைகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது. மேலும் ஆரோக்கியமான உறக்கத்தையும் வரவழைக்கிறது. எனவே இதற்கான பவுடரை நீரில் கலந்து குளிக்கலாம். நிக்கோட்டீன், காபைன், ஆல்கஹால் போன்றவற்றை உறங்கும் முன் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவில் எளிய உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். உறங்கும் முன் லேப்டாப், டி.வி., மொபைல் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment