செயற்கரிய செய்வார் பெரியர் எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல்வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்.
பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமில்லாமல் விடுதலை பெற்ற பாரத நாட்டின் உயர்வுக்காகவும், அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராஜர். தலைநிமிர்ந்த தமிழகத்தை காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் அவர்.
இத்தகைய பெருமைக்குரிய காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
தந்தையை இளமையிலேயே இழந்த காமராஜர் தம் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். தன் மாமாவின் கடையில் வேலைக்கு சேர்ந்தார். செய்தித்தாள்களை படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டும் அரசியலறிவையும், நாட்டுப்பற்றையும் வளர்த்துக்கொண்டார். அவையே அவரை விடுதலைப்போரில் ஈடுபடத் தூண்டின.
விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராஜர். காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று உப்புசத்தியாக்கிரக போரில் கலந்துகொண்டார். ஒத்துழையாமை இயக்கம், அந்நியத்துணி எரிப்பு, சட்டமறுப்பு இயக்கம், 1942-ல் நடந்த ஆகஸ்டு புரட்சி முதலிய போராட்டங்களில் பங்கேற்றார். தனது 12-ம் வயதில் அடிமட்ட தொண்டனாய் அரசியலில் நுழைந்த காமராஜர் 8 ஆண்டுகள் சிறையில் அல்லற்பட்டார்.
செயல்வீரராய் விளங்கிய காமராஜர் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராக விளங்கினார். கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற புகழ் பெற்றதாக இருந்தாலும் தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராஜர் வேதனைப்பட்டார். அதனால் ஊர்தோறும் பள்ளிகளை திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராஜர் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களை உருவாக்கி தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடிகோலினார்.
தமிழகமெங்கும் பல்வேறு அணைகளை கட்டி நீர்வளத்தை பெருக்கினார். தேனி மாவட்டத்தில் வைகை அணை அவருடைய முயற்சியில் உருவாகி இன்று பாசனத்திற்கும், குடிநீருக்கும் பெரும் உதவியாக உள்ளது. நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார். மின் உற்பத்தியை பெருக்கி தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய செய்தார். ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்புநிதி ஆகிய முப்பெருந்திட்டங்களை கொண்டு வந்தார்.
ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் அறிவு கூர்மை படைத்தவர். நான் பாடப்புத்தகத்தில் புவியியலை படிக்கவில்லை. ஆனால் நாட்டில் எத்தனை ஏரி குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும் என்று கூறுவார். இதனால் காமராஜர் படிக்காத மேதை எனப் போற்றப்படுகிறார். கர்ம வீரர் காமராஜர் என்றும் அழைத்தனர்.
காமராஜர் உயர்பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர். காட்சிக்கு எளியவர், சுருக்கமாய் பேசுபவர், செயலில் வீரர், தமக்கென வாழாது நாட்டுக்காக வாழ்ந்த தியாகி, வாழ்நாள் முழுவதும் செல்வ வாழ்க்கையில் நாட்டமின்றி வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மலாவார்.
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கினார்.
Search here!
Thursday 15 July 2021
New
நாடு போற்றும் நல்ல தலைவர் காமராஜர்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி வளர்ச்சி நாள்
Tags
கல்வி வளர்ச்சி நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment