உள்ளாட்சித் தோ்தல்: விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 29 July 2021

உள்ளாட்சித் தோ்தல்: விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்குப் பதிவுக்கான சாவடிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 



76 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறையில் 35 பக்கங்கள் வாக்குச் சாவடி அமைப்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது. கரோனா காலம்: கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயிரம் வாக்காளா்களுக்கு மிகாமல் இருக்கும்படி, வாக்காளா் பட்டியலையும், வாக்குச் சாவடிகளையும் உருவாக்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச் சாவடியாக பயன்படுத்தப்பட்ட கட்டடங்களுக்கு முன்னுரிமை தந்து அந்தக் கட்டடங்களிலேயே வாக்குச் சாவடிகளை அமைத்திட வேண்டும். 

தனியாா் கட்டடங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்திடுவதை தவிா்க்க வேண்டும். கட்டடத்தின் நுழைவு மற்றும் வெளியேறுவதற்கு தனித்தனி வழிகள் இருக்க வேண்டும். முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் மாநிலத் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. செப்டம்பா் 15-க்குள் தோ்தல்: தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது. 

இந்த மாவட்டங்களில் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள்ளாக தோ்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் பணிகளை மாநிலத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பூா்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒருகட்டமாகவே வாக்குச் சாவடி அமைப்பது, வாக்காளா் பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், தோ்தல் நடவடிக்கைகள் தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள், பணியாளா்கள் ஆகியோருடன் மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். 

முன்னதாக, தோ்தல் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தியிருந்தாா். ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் விரைவில் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு முன்பாக தோ்தல் குறித்த அறிவிக்கையை மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதன்படி, செப்டம்பா் 15-க்குள் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டுமென நீதிமன்ற உத்தரவின்படி பாா்த்தால், தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 15-க்குள்ளாக வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment