இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்! - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 20 July 2021

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்!



கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் எண்மத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (டிஜிட்டல் யூனிவர்சிட்டி) தொடங்கப்பட்டுள்ளது. எண்ம அறிவியல், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான கேரள பல்கலைக்கழகம் (கேரளா யுனிவர்சிட்டி ஆஃப் டிஜிட்டல்சயின்ஸஸ், இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி) என்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர். திருவனந்தபுரம் - டெக்னோசிட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு 1,200 மாணவர்கள் பயில முடியும். ஏற்கெனவே "இந்திய தகவல் தொழிநுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (ஐஐஐடிஎம்-கேரளா)' என்ற பெயரில் இயங்கிவந்த உயர்கல்வி நிறுவனமே கடந்த பிப்ரவரி மாதம் கேரள அரசால் மேம்படுத்தப்பட்டு, "டிஜிட்டல் யூனிவர்சிட்டி' ஆக மாறியுள்ளது. கணினி அறிவியல், தகவலியல், பயன்பாட்டு மின்னியல், இமேஜிங் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளையும், எண்மத் தொழில்நுட்பம் சார்ந்த செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் (மெஷின் லேர்னிங்), கட்டச்சங்கிலி (பிளாக்செயின்), (இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), தரவுப் பகுப்பாய்வியல் (டேட்டா அனாலிடிக்ஸ்), சூழியல் தகவலியல், புவிசார் பகுப்பாய்வியல் போன்ற நவீனப் படிப்புகளையும் இந்தப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. எண்மத் தொழில்நுட்பங்கள் மூலம் உயர்கல்வியில் உலகத்தரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ள டிஜிட்டல் யூனிவர்சிட்டி, தேசிய அளவிலும் உலகளாவிய அளவிலும் சிறந்து விளங்கும் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புகள் மட்டுமல்லாது, எண்மமயமாக்கப்பட்ட - செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு நுண்ணறிவு, இமேஜிங் உள்ளிட்ட பிரபல படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எண்மப் பல்கலைக்கழகம் 5 தனி கல்வித்துறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது: அவை: 1. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இஞ்சினீயரிங் இங்கு கோட்பாட்டு கணினி அறிவியல், கணக்கீட்டு நுண்ணறிவு, சிஸ்டம் அண்ட் நெட்ஒர்க்ஸ் ஆகிய பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. 2. ஸ்கூல் ஆஃப் டிஜிட்டல் சயின்ஸ்சஸ் இங்கு நிதிப் பகுப்பாய்வியல் மற்றும் எண்மப் பொருளாதாரம், உயிரிக் கணக்கீடு மற்றும் மருந்து வடிவமைப்பு, இயற்கை அறிவியல், கணக்கீட்டு தொற்றியல், புவி அறிவியல், வேளாண் அறிவியல், ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட 13 பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. 3. ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரானிக் சிஸ்டம் அண்ட் ஆட்டோமேஷன் இங்கு செயற்கை நுண்ணறிவு வன்பொருள்கள், ஏ.ஐ.ரோபோட்டிக்ஸ் சிக்னல் ப்ரோசஸிங் அண்ட் ஆட்டோமேஷன், கம்ப்யூட்டேஷனல் இமேஜிங் சிஸ்டம் ஆகிய 4 பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. 4. ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேட்டிக்ஸ் இங்கு சூழலியல் அறிவியல், புவிக் கண்காணிப்பு, நீடித்த வளர்ச்சி, பாரம்பரிய சூழலியல் அறிவு, பயோகாஸ்டிக்ஸ் பிரிவுகளில் 7 துறைகளில் படிப்புகள் உள்ளன. 5. ஸ்கூல் ஆஃப் டிஜிட்டல் ஹூமானிட்டிஸ் அண்ட் லிபரல் ஆர்ட்ஸ் இங்கு வர்த்தக நுண்ணறிவு, வர்த்தகக் கொள்கை, கணக்கீட்டுப் பொருளாதாரம், கணக்கீடு மொழியியல் / தடய மொழியியல், எண்மப் பொருளாதாரம், எண்ம ஊடக வடிவமைப்பியல், எக்கனோமெட்ரிக்ஸ், மின் ஆளுமை, மேலாண்மை அறிவியல், கண்டுபிடிப்புகளும் தொழில்முனைவும், தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட 23 பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. ஆராய்ச்சிப் படிப்புகளில் வழக்கமான படிப்புகள் மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு நுண்ணறிவு, இமேஜிங் உள்ளிட்ட நவீன படிப்புகள் இங்கு மட்டுமே உள்ளன. எண்மத் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வகையான துறைகளிலும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற சிறப்பு இலக்குடன் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய வருகை ஆய்வாளர் (விசிட்டிங் ஃபெல்லொ), முனைவர் பட்டப்படிப்புகள்- பிஹெச்.டி. - முழுநேரம், பகுதிநேரம், ஒருங்கிணைந்த படிப்பு, தொழில்துறை சார்ந்த ஆய்வு), முதுநிலைப் படிப்புகள் (எம்.எஸ்சி., எம்.டெக்.), மின் ஆளுகையில் சான்றிதழ் படிப்பு ஆகியவை இங்கு கற்பிக்கப்படுகின்றன. வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புடன் வேலை பார்த்துக்கொண்டே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு (இண்டஸ்ட்ரி ரெகுலர் பிஎச்டி) இதன் சிறப்பம்சமாகும். இங்கு ஆராய்ச்சி மேற்கொள்வோர், தற்காலப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், வழிகாட்டியுடன் இணைந்து பணியாற்ற முடியும். எண்மத் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 10 வகையான ஆய்வகங்களும், 6 அபிவிருத்தி மையங்களும் இங்கு உள்ளன. அது மட்டுமல்ல, புதியன கண்டறியத் துடிப்பவர்களுக்கான "தின்க்-குபேட்டர், கேரளா பிளாக்செயின் அகாதெமி, மேக்கர் வில்லேஜ்' ஆகிய அதிநவீன வசதிகளுடன் கூடிய துணை அமைப்புகளும் இங்கு உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் கல்வியாண்டு தற்போது தொடங்கிவிட்டது. கடந்த மே 3-ஆம் தேதி ஆராய்ச்சிப் படிப்புக்கான அறிவிப்பு வெளியானது. இங்கு மொத்தமுள்ள 30 ஆராய்ச்சி இடங்களுக்கு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஆகஸ்ட் மாதம் இங்கு வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சாஜி கோபிநாத் கூறியதாவது: ""உண்மையான கல்வி என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அது சரியான வளர்ச்சியாக இருக்க முடியாது என்று மகாத்மா காந்தி கூறுவார். அவரது அடியொற்றியே, தற்போதைய உலகில் பேரிடம் வகிக்கும் எண்மத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த மூன்று தொழில்புரட்சிகளிலும் இந்தியாவால் பெருமளவில் சாதிக்க முடியவில்லை. அதற்கு அன்றைய காலச்சூழல்களும், அந்தச் சூழலுக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளாததுமே காரணம். ஆனால், தற்போது உலகை ஆளும் நான்காவது தொழில்புரட்சி அறிவின் பேராற்றலால் இயக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பமே இன்றைய உலகை ஆள்கிறது. இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நமது இளைஞர்களுக்கு இது மாபெரும் வாய்ப்பு. அவர்களது கனவுகளை விரிவாக்கவும், நனவாக்கவும் எண்மப் பல்கலைக்கழகம் ஓர் ஏணியாக இருக்கும்'' என்றார். எண்மப் பல்கலைக்கழகம் குறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தைக் காணலாம். அதன் முகவரி: https://duk.ac.in

No comments:

Post a Comment