தமிழக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
அகவிலைப்படி
நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிக தொகை செலவிடப்பட்டதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவில் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய மந்திரி சபை ஒப்புதல்
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போதெல்லாம் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது வழக்கமாகும்.
தமிழக அரசு திட்டம்
மத்திய அரசு அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment