'பள்ளிகளை படிப்படியாகத் திறக்கலாம்' - தில்லி எய்ம்ஸ் இயக்குநர் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 20 July 2021

'பள்ளிகளை படிப்படியாகத் திறக்கலாம்' - தில்லி எய்ம்ஸ் இயக்குநர்

கரோனா பரவல் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கலாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறந்தபாடில்லை. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்றும் அதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: கரோனா பரவல் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம். 5 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை விகிதங்களைக் கொண்ட பள்ளிகளில் மாற்று நாள்களில் வகுப்புகளை பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம். இதனால் மாணவர்கள் நெருக்கமாக இல்லாமல் சமூக இடைவெளியில் இருப்பதை உறுதி செய்ய முடியும். இதுகுறித்து மாணாக்கர், பெற்றோர்களிடமும் அவர்களின் விருப்பத்தை ஆராய்ந்து பள்ளிகள் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகள் திறப்பு அவசியம். ஏனெனில் ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப்படிப்பின் முக்கியத்துவம் இன்றியமையாதது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குழந்தைகளிடையே மனதளவில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல குழந்தைகள் இயற்கையாகவே கரோனா தொற்றை எதிர்த்து போரிடும் நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் சில குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். ஒருவேளை கரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளை உடனடியாக மூடிவிடவும் தயாராக இருக்க வேண்டும். வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படும் சூழ்நிலையில் ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணாக்கர் பலருக்கும் இணைய வசதி கிடைக்காத சூழல் உள்ளது. இது கல்வியில் பாகுபாட்டை ஏறப்டுத்துகிறது. கற்றலில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்

No comments:

Post a Comment