ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 9 July 2021

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

ஆலோசனைக் கூட்டம் 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 8-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

கல்வி உதவித் தொகை பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ‘‘போஸ்ட் மெட்ரிக்” மற்றும் ‘‘பிரி மெட்ரிக்” கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்வி உதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்கள் ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் கீழ்ச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். 

இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் கூடுதலாக வசதிகள் தேவைப்படும் குடியிருப்புகளைக் கண்டறிந்து அக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் பணியை விரைந்து செயல் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தாட்கோ திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்த முதல்-அமைச்சர், துரித மின் இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். 

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment