தீவிர மக்கள் பணி மூலம் இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
மக்கள்நலப் பணி
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அது முதல் பல்வேறு மக்கள்நலப் பணிகளை அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பம்பரமாக சுழன்று குறுகிய காலத்தில் அதை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஸ்டாலின் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சர் என்ற இடத்தை அவர் பிடித்துள்ளார்.
தலைசிறந்த முதல்-அமைச்சர்
‘ஓர்மாக்ஸ்' என்ற நிறுவனம் மாதந்தோறும் இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களில் யார் சிறந்த முதல்-அமைச்சர் என்று பட்டியலிட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் கடந்த மாதம் (ஜூன்) இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முறை முதல்-இடத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருந்தார். அப்போது ஸ்டாலின், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகிய இருவரும் 2-வது இடத்தில் இருந்தனர். தற்போது பினராயி விஜயனை பின்னுக்குத் தள்ளி ஸ்டாலின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2-வது இடத்தில் பினராயி விஜயனும், 3-வது இடத்தில் நவீன் பட்நாயக்கும் உள்ளனர்.
மக்களின் நன்மதிப்பு விகிதம்
கடந்த மே மாதம் 62 சதவீத மக்களின் நன்மதிப்பை ஸ்டாலின் பெற்றிருந்ததாகவும், ஜூன் மாதம் அது 6 சதவீதம் உயர்ந்து 68 சதவீதமாகி உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பினராயி விஜயனைப் பொறுத்தவரை கடந்த மே மாதம் அவருக்கு மக்களின் நன்மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தநிலையில், ஜூன் மாதம் அந்த விகிதம் குறைந்து வெறும் 2 சதவீதமே உயர்ந்திருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-வது இடத்தில் மம்தா
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தலைசிறந்த முதல்-அமைச்சருக்கான பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த மே மாதம் 4-வது இடத்தில் இருந்த மம்தா பானர்ஜி தற்போது 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளான ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 9-வது இடத்திலும், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா 13-வது இடத்திலும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் 14-வது இடத்திலும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment