குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும் ‘புதுமை ஆசிரியர்’ - EDUNTZ

Latest

Search here!

Saturday 10 July 2021

குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும் ‘புதுமை ஆசிரியர்’

‘‘இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் ஸ்மார்ட். 10 வயதிற்குள்ளாகவே ஏதாவது ஒருதுறையில் சாதித்துவிடுகிறார்கள். குறிப்பாக கணினி, மென்பொருள் துறையில் அவர்களது ஈடுபாடு நம்பமுடியாத அளவில் இருக்கிறது. கணினி மொழிகளை வெகு சுலபமாக புரிந்து கொள்கிறார்கள். அனுபவசாலிகளை விடவும், வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்’’ என குழந்தைகள் பற்றி ஆர்வமாய் பேச ஆரம்பிக்கிறார், சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கல்பனா. 


முதுகலை கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சில வருடங்கள் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு சில கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, இப்போது திறமையான குழந்தைகளுக்கு கணினி மொழிகளையும், மென்பொருள் உருவாக்கத்தையும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். ‘‘2016-ம் ஆண்டிலிருந்தே, இலவச கோடிங் சொல்லி கொடுக்கிறேன். 


வழக்கமான ஐ.டி. வேலையை விட, குழந்தைகளிடம் பழகுவது, அவர்களின் திறமைகளை வளர்த்தெடுப்பது போன்றவை சுவாரசிய அனுபவமாக இருந்தது. அதனால் திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சி, சி++, பைத்தான் என எளிய கம்ப்யூட்டர் கோடிங்கில் தொடங்கி, இன்றைய புதுவரவு வரை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறேன். இந்த காலத்து குழந்தைகள், கோடிங் சொல்லிக்கொடுக்கும் என்னையே மிஞ்சும் அளவிற்கு, அறிவை கூர்தீட்டிக் கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு கோடிங் சொல்லி கொடுக்கிறேன். 

அவர்கள், எனக்கு எதார்த்தத்தையும், உலக நடைமுறைகளையும் சொல்லி கொடுக்கிறார்கள்’’ என்றவர், குழந்தைகளுக்கு கோடிங் கல்வியோடு, கூடுதல் திறன் வளர்க்கும் பயிற்சிகளையும், பள்ளிப்பாடங்களுக்கான புரிதல் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். ‘‘கோடிங், பாடப்படிப்பு... எதுவாக இருந்தாலும் சரி, போட்டி நிறைந்த உலகில் கூடுதல் திறனும் அவசியமாகிறது. அதனால்தான் பள்ளிக்குழந்தைகளுக்கு ‘சாப்ட் ஸ்கில்’ எனப்படும் கூடுதல் திறன் கற்றுக்கொடுத்து, அவர்களை மேம்படுத்த முயல்கிறேன். 

 ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, 5-ம் வகுப்பு மாணவனுக்கு நேர மேலாண்மை, பக்குவமாய் பேசுதல், ஒழுக்கமாக உணவு சாப்பிடும் பழக்கம், விவாத கருத்தை உள்வாங்கும் திறன், முறையான பேச்சுபயிற்சி போன்ற திறன்களும், நல்ல பழக்கங்களும் இருக்க வேண்டும். அதுவே மேல்நிலைப் பள்ளி மாணவன் என்றால் மொழி அறிவு, தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், பிறரது கருத்துகளுக்கு செவிக்கொடுத்தல்... இப்படிப்பட்ட திறன்களை பெற்றிருக்கவேண்டும். 

இதைதான் நான் முறையாக கற்றுக்கொடுக்கிறேன்’’ என்றவர், குழந்தைகளுக்கு தொழில்முனைவோருக்கான சிறப்பு பயிற்சிகளையும் வழங்குகிறார். குழந்தைகளிடம் வெகு காலமாக பழகிவரும் கல்பனா, அவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினையான படிப்பு சுதந்திரத்திற்கு தீர்வு காண முயன்றிருக்கிறார். ‘‘90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். இதை கோடிங் படிக்க வரும் குழந்தைகள் வாயிலாக தெரிந்து கொண்டதோடு, அதற்கு முறையான தீர்வு காண ஆசைப்பட்டேன். கொரோனாவிற்கு முன்பு வரை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகளில், ‘புதுமையான கல்வி பற்றி தெரிந்து கொள்ள ஆசையா..?’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையுடன் கலந்து கொள்வேன். 

சில பெற்றோர் ஆர்வதோடு வந்து விளக்கம் கேட்பார்கள். சிலர் கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். காலணி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், எண்ணெய் நிறுவனங்கள், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ், கேம் டெவலப்மெண்ட், மினியேச்சர் ஆர்ட், அணிகலன் வடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி, தொல்லியல் படிப்பு... இப்படி தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படாத, அறியப்படாத படிப்புகள் ஏராளமாய் இருக்கின்றன. இருப்பினும் தமிழ்நாட்டு பெற்றோர் இவைகளில் நாட்டம் செலுத்துவதே இல்லை. என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளிலேயே தங்களது குழந்தைகளை சேர்த்துவிடுகின்றனர்’’ என்று ஆதங்கப்படும் கல்பனா, நிறைவாய் சொல்வது இதைதான். 

 ‘‘குழந்தைகளின் வாழக்கையே, அவர்கள் படிக்கும் படிப்பில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு. அதை மட்டும் செய்துவிடாதீர்கள். அவர்களை அவர்களாகவே படிக்கவிடுங்கள். வளரவிடுங்கள்’’ என்று முடித்துக்கொண்டு, ஆன்லைன் கோடிங் வகுப்புகளுக்கு கிளம்பிவிட்டார்.

No comments:

Post a Comment