தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 



தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், அரசு பணியில் இல்லாத முதுகலை மருத்துவ படிப்பு, முதுகலை டிப்ளமோ, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் (டி.எம்., எம்.சி.எச்.) போன்ற படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து அதற்கு அனுமதி அளித்துள்ளது. 

 அதன்படி, பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரத்து 800 ஆக இருந்த உதவித்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. முதுகலை மருத்துவ படிப்பை படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.38 ஆயிரத்தில் இருந்து ரூ.48 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.49 ஆயிரமாகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. 

அதேபோன்று முதுகலை டிப்ளமோ படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு ரூ.38 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.47 ஆயிரத்து 500 ஆகவும் உதவித்தொகை அதிகரிக்கப்படுகிறது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.46 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.52 ஆயிரத்து 500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.48 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரமாகவும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. 

 ஆண்டுதோறும் இந்த உதவித்தொகை 3 சதவீதம் அதிகரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் உயர்வு தொகை கணக்கிட்டு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!