தமிழக அரசின் இன்றைய (01.08.2021) செய்தி வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 1 August 2021

தமிழக அரசின் இன்றைய (01.08.2021) செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண்: 542 நாள்: 0108.2021 செய்தி வெளியீடு 

விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும் விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் - மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தல். 

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாகத் தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினைப் பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினைத் தயாரிக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். 

வெளியீடு: இயக்குநர், 
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, 
சென்னை- 9 





No comments:

Post a Comment