கற்றல் இழப்பை சரிசெய்ய ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 20 August 2021

கற்றல் இழப்பை சரிசெய்ய ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய, ரூ.200 கோடியில் அடுத்த 6 மாதங்களுக்கு கற்பித்தல் வாசிப்பு இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். 

தமிழக சட்டசபையில் நேற்று நிறைவாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாபெரும் சவால் கொரோனா பெருந்தொற்றால் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் முறையாக கல்வி கற்பதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை கொண்டு சேர்ப்பது மாபெரும் சவாலாக இருக்கிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள், இணைய வழிக்கல்வி என்று தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கடைக்கோடி கிராமத்தில் வாழும் ஏழை குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இயலவில்லை என்பதே உண்மையான நிலையாகும். 

 கற்பித்தல் வாசிப்பு இயக்கம் இதை உணர்ந்து, தமிழக பட்ஜெட்டில் கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை சரிசெய்திட மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகம் எங்கும் செயல்படுத்தப்படும். ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்களின் உதவியோடு, கல்வியாளர்களின் வழிகாட்டுதலோடு, பள்ளி கல்வித்துறை இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லும். 

 ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு வீதிகள்தோறும் வகுப்பறை, மாலை நேரங்களில் நிலவொளி பள்ளி என கடைக்கோடியில் வாழும் ஏழை குழந்தைகளின் இல்லத்திற்கும் இந்த கற்பித்தல் வாசிப்பு இயக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment