கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கியது வீடு வீடாக ஆசிரியர்கள் கணக்கெடுப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 11 August 2021

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கியது வீடு வீடாக ஆசிரியர்கள் கணக்கெடுப்பு



சென்னையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக வீடு வீடாக சென்று ஆசிரியர்கள் குழு கணக்கெடுக்கிறாா்கள். 

கணக்கெடுப்பு பணி 

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணி கலெக்டர்கள் மூலம் மாவட்டந்தோறும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. 

 தலைநகர் சென்னையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலமாக 2021-22-ம் ஆண்டில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா, இடைநிற்றல் மற்றும் இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியுடன், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணியையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. வீடு தேடி செல்லும் ஆசிரியர் குழு அதன்படி, பள்ளி செல்லா, இடைநிற்றல் மற்றும் இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மற்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் ஆய்வுப்பணி நேற்று தொடங்கியது. 

சென்னை அமைந்தகரை செனாய்நகரில், மஞ்சக்கொல்லை சென்னை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.குணசெல்வி தலைமையில் ஆசிரியர் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மண்டல கண்காணிப்பாளர் வெர்ஜின் சோபியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். தெருவில் நடமாடும் அனைத்து குழந்தைகளையும் அழைத்து பள்ளி செல்கிறார்களா? என்பது தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டனர். சென்னை முழுவதும்... 

இதுபோல சென்னை முழுவதும் நேற்று கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் ஆய்வுப்பணி தொடங்கியது. இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அதிகாரி ஆ.க.காமராஜ் கூறியதாவது:- 

செல்போன் செயலி மூலம்... பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகளுக்கான ஆய்வுடன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் கணக்கெடுப்பு பணியும் தொடங்கியுள்ளது. முதன்மை கல்வி அதிகாரி அனிதா மேற்பார்வையில் இந்த பணிகள் முழுவீச்சில் கையாளப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, களத்துக்கு செல்லும் ஆசிரியர் குழு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை TNEMIS எனும் செல்போன் செயலி மூலம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 

இதற்காக வெ.பன்னீர்செல்வம், ச.சத்யா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த குழந்தைகள் குறித்த தகவல்கள் அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதனைத்தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் அத்தியாவசிய உதவிகள் அரசின் வழிகாட்டுதலின்பேரில் நிச்சயம் வழங்கப்படும். அதேபோல பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment