மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் வழியான கற்பித்தலை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பொதுத் தேர்வுஎழுத உள்ள மேல்நிலை வகுப்புமாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்துவருகிறது.
இதையடுத்து, மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் விநியோகம், வளாகங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை துரிதமாக முடிக்க ஏதுவாக அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தினமும் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
கரோனா தடுப்பு வழிமுறைகள்
அதன்படி, அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக நேற்று பணிக்குத் திரும்பினர். தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு என பள்ளி வளாகங்களில் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் குழுக்களாக இல்லாமல், தனித்தனியாக அமர்ந்து பணிகளை மேற்கொண்டனர். கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வித் தொலைக்காட்சி பயன்பாடு குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ‘பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் பயில்வதை உறுதிசெய்ய வேண்டும். வாட்ஸ்-அப் வழியான கற்பித்தலை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தவேண்டும்.
பாட வாரியாக அலகுத்தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை துரிதப்படுத்துவதுடன், உளவியல் ரீதியாகவும் ஆலோசனைகள் வழங்கி, கற்றல் இடைவெளியை சீர்செய்ய வேண்டும்’ என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. SOURCE NEWS
No comments:
Post a Comment