தினம் ஒரு தகவல் ஞாபகமறதி நோய் - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 11 أغسطس 2021

தினம் ஒரு தகவல் ஞாபகமறதி நோய்

தினம் ஒரு தகவல் ஞாபகமறதி நோய் 

 மனக்கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா-இல்லையா? வீட்டை பூட்டிவிட்டு வந்தோமா? என்ற சந்தேகங்கள் எல்லாம் எப்போதாவது வந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் (ஞாபகமறதி) நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். 

டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60-70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வயதானவர்களுக்குத்தான் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது. உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் ஞாபக மறதி நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது. 

சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு. அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்கு தனியாகப் போய்விட்டு திரும்பி வரமுடியாது. துணிகளை பீரோவில் வைப்பதற்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுவார்கள். 

குளியலறைக்கு செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்கு போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்றும் ஞாபகம் இருக்காது. உறவினர்களை முகத்துக்கு பதிலாக குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள். அல்செய்மர் நோய் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம். 

சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர்களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. எனவே இந்நோய் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந் தேதி ‘உலக ஞாபகமறதி நோய் நாள’் கடைபிடிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق