வழக்கம்போல, 'பாஸ்டன் டைனமிக்ஸ்' வெளியிட்ட புதிய காணொளி, இணையத்தில் வைரலானது. அதில், வழக்கம்போல, 'அட்லஸ்' ரோபோ, சில புதுமைகளைச் செய்து காட்டியது. இந்த முறை, 'பார்க்கோர்' என்ற சாகசக் கலையின் சில அடிப்படை அசைவுகளை, இன்னொரு கூட்டாளியுடன் சேர்ந்து செய்து காட்டியது அட்லஸ்.
கடந்த முறை சாதாரணமாக அந்தர் பல்டி அடித்த அட்லஸ் ரோபோ, புதிதாக, சாய்மானமாக அடுக்கி வைக்கப்பட்ட மரக் கட்டைகளின் மீது, இடமும் வலமுமாக கால்களை வைத்து ஓடி வந்து காட்டுகிறது.
இதுவரை சமநிலையோடு நடக்கவும், குதிக்கையில் விழாமல் இருக்கவுமே கைகளை பயன்படுத்திய அட்லஸ், ஒரு முறை மட்டும், கட்டை ஒன்றின் மேல் கைகளை வைத்து ஊன்றித் தாண்டிக் காட்டுகிறது.பார்க்கோர் கலையின் அடிப்படைகளைச் செய்து காட்டிய அதே வேளையில், அட்லசுக்கு முன்பு இருந்த மின் கம்பி இணைப்பு இந்த முறை இல்லை. முழுதும் மின் கலன் தந்த ஆற்றலை வைத்தே வித்தைகளைச் செய்திருக்கிறது
அட்லஸ்.
அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் டைனமிக்சின் விஞ்ஞானிகள், கடந்த 10 ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சிகளின் விளைவு தான் தாவல் ரோபோ காணொளி. நடப்பது, ஓடுவது, பாட்டுக்கு நடனமாடுவது என, 5 அடி உயரமும், 41 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ புதிய செய்கைகளை எளிதில் செய்துவிடுகிறது.ராணுவ எடுபிடி, சரக்கு குடோன்களில் பளுதுாக்கி போன்ற பணிகளுக்கு அட்லஸ் ரோபோ தயாராகி வருவதாக சில ரோபோ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், பாஸ்டன் டைனமிக்ஸ் விஞ்ஞானிகள், இன்னும் ஆய்வுகள் தொடரும் என்றே தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment