தினம் ஒரு தகவல் : காணாமல் போகும் கடற்கரை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 20 August 2021

தினம் ஒரு தகவல் : காணாமல் போகும் கடற்கரை

உலகின் 2-வது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை இன்றைக்கு பெருமையாக கருதுகிறோம். அதே நேரம், சென்னை துறைமுகம் கட்டப்பட்டதால் திருவொற்றியூர் பகுதியில் இருந்த கடற்கரை காணாமலே போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. இப்படி நமது கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப் பட்டுவரும் துறைமுகம் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் கடலரிப்பை உருவாக்கிவிடுகின்றன. 

ஆர்ப்பரித்து எழுந்துவரும் கடல் அலைகள் கடற்கரைகளில் உள்ள வீடுகளையும் மீனவ கிராமங்களையும் எப்படி காவு வாங்குகின்றன? தரைவாழ் தாவரங்கள், உயிரினங்களின் அழிவு பற்றி சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெரும்பாலானவர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால், மணல் நிறைந்த கடற்கரைகள் நம் கண் முன்னே காணாமல்போவது பற்றி கவனிக்க தவறிவிட்டோம். இப்படி இயற்கை சமன்பாட்டை குலைக்கும் வகையிலும், தொந்தரவு செய்யும் வகையிலும் மனிதர்கள் ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் கடல் அரிப்பை அதிகரிக்கின்றன. 

துறைமுகங்கள், கடற்கரையோர அனல்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக இந்திய கடற்கரைகளில் 40 சதவீதம் அழியும் ஆபத்தில் உள்ளன. இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் கடலரிப்பை தடுப்பதற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு காணப்படவில்லை.. வளர்ச்சி நடவடிக்கைகளால் இயற்கையான மணல் நகர்வு தடுக்கப்படுவதால்தான் கடல் அரிப்பே நிகழ்கிறது. வெறுமனே கடற்கரை தடுப்புச் சுவர்களை மட்டும் அரசுகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. 

இது போகாத ஊருக்கு வழி என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி கடற்கரை வழியாகவே பயணித்துதான் உலகம் முழுவதும் பரவியது என்கின்றன, அறிவியல் ஆய்வுகள். அன்று தொட்டு இன்றுவரை மனிதகுலத்துக்கு வளம் தந்த கடற்கரைகள், நமது சந்ததிகளுக்கும் அதே வளத்தைத் தரும் என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது எஞ்சி இருக்கும் கடற்கரைகளை காப்பாற்றுவது நம் கைகளில்தான் அடங்கி இருக்கிறது.

No comments:

Post a Comment