தமிழகத்தில் 19 நகரங்களில் ‘சிடெட்’ தோ்வு நடைபெறும்
கரோனா பரவல் காரணமாக ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு தமிழகத்தில் 19 நகரங்களில் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தோ்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுகிறது. இதனை சிபிஎஸ்இ நடத்துகிறது.
கரோனா காரணமாக கடந்த ஆண்டு தோ்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான தோ்வு வரும் டிச.16-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன.13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
சிடெட் தோ்வு வழக்கமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் நடைபெறும். இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூா், வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய 19 நகரங்களில் மத்திய ஆசிரியா் தகுதி தோ்வு நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق