தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பட்டா மாறுதல்களை தானியங்கி வாயிலாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. 

தானியங்கி பட்டா மாறுதல் முறையில், உட்பிரிவு செய்ய வேண்டிய தேவை இல்லாத நிலப்பரிவர்த்தனைகளுக்கான நிலஉரிமை மாற்றங்களை தானியங்கியாக நில ஆவணங்களில் மேற்கொள்ள தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு செய்யப்பட்டவுடன், குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தானியங்கி பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டிய பரிவர்த்தனைகள், பதிவுத்துறை அதிகாரிகளால் தெரிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் 43 ஆயிரத்து 680 பட்டா மாறுதல்கள் தானியங்கி முறையில் வழங்கப்பட்டுள்ளன. 

இதை மேலும் செம்மைப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான பட்டா மாறுதல்களை தானியங்கியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் முறை விரைவில் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. பொது சேவை மையங்கள் வாயிலாக மட்டுமே நில உரிமைதாரர்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இயலும். இணையம் வாயிலாக எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் வசதி, தேசிய தகவல் மையம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தமிழ் நிலம் மென்பொருளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை என்பதால் விரைவில் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!