அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் - EDUNTZ

Latest

Search here!

الأحد، 19 سبتمبر 2021

அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், விண்வெளிப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆன்லைனில் தேர்வு ஒன்றை நடத்தியது. 


இதில் தேர்ச்சி பெறுபவர்கள், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாகவும், ரஷியா நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்வெளி தொடர்பாகக் கொடுக்கப்படும் பயிற்சியிலும் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவார்கள், என்று அறிவித்தது. 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வேதாஸ்ரீ, ரகசியா இருவரும், மாநில அளவில் முதல் பத்து இடங்களில் தேர்வாகி உள்ளனர். இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால், இருவரும் ரஷியாவின் விண்வெளி நிறுவனத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். 

இதையறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருவரையும் அழைத்துப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியிருக்கிறார். அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்பராணி மற்றும் ஆசிரியர் களும் பாராட்டினர். மேலும், சமூக ஊடகங்களிலும் இவர்களைப் பாராட்டி நிறைய வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

இது குறித்து வேதாஸ்ரீ கூறியது: 

“எனது அப்பா சிவக்குமார் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அதனால் என்னை அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சொல்லி சேர்த்து விட்டார். அம்மா பாரதி தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். 

இந்தப் போட்டி குறித்து தலைமை ஆசிரியர் சொன்னபோது, ஆசிரியர்கள் எல்லோரும் என்னையும், ரகசியாவையும் கலந்து கொள்ளச் சொன்னார்கள். நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று போட்டி குறித்து திட்டமிட ஆரம்பித்தோம். புத்தகம், இணையதளம் மூலம் தகவல் களைத் திரட்டினோம். முதல் சுற்றில் விண்வெளி தொடர்பாக ஆன்லைனில் கேட்கப்பட்டிருந்த கேள்வி களுக்குப் பதில் அளித்தோம். 

மாநிலத்தில் எங்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் வெற்றி பெற்று இருக்கிறோம். குழந்தைகள் நல மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் கனவு” என்றார். அடுத்து ரகசியாவிடம் பேசினோம். "எனது அப்பா ராஜேந்திரன் காவல் துறையில் பணிபுரிந்தார். அவர் இப்போது உயிரோடு இல்லை. எனக்கு அண்ணன் இருக்கிறார். அம்மா சித்ரா தான் எங்களைக் கவனித்துக் கொள்கிறார். நானும், வேதாவும் நன்றாக படிப்போம். இப்போது, இரண்டாம் கட்டத் தேர்வுக்காக விண்வெளி தொடர்பான குறிப்புகளை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டோம். 

அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்றால், ரஷியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிற விண்வெளி தொடர்பான பயிற்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அங்கு விண்வெளி மையத்தின் செயல்பாடுகள், விண்வெளி வீரர்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். நிச்சயம் நாங்கள் இருவருமே வெற்றி பெற்று, அரியலூரில் இருந்து ரஷியாவுக்குப் போவோம்” என்ற அவரின் குரலில் நம்பிக்கை மிளிர்கிறது. .


ليست هناك تعليقات:

إرسال تعليق