கேள்வித்தாளில் எந்த மாற்றமும் இல்லை - கல்வி அமைச்சர் விளக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 September 2021

கேள்வித்தாளில் எந்த மாற்றமும் இல்லை - கல்வி அமைச்சர் விளக்கம்

பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாளில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை இரண்டு பள்ளிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் ஆய்வு செய்தார். கோடம்பாக்கம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, சூளைமேடு பெண்கள் மேனிலைப் பள்ளி, ராயப்பேட்டை ஹோபார்ட் அரசினர் மேனிலைப் பள்ளி ஆகியவற்றில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்ற அமைச்சர் மற்றும் எம்எல்ஏ, மாணவியரை சந்தித்து உரையாடினர். பிறகு மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

அது குறித்து மாணவ, மாணவியரிடம் பேசினேன். மாணவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். பள்ளியில் தங்கள் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு ஒரு வாரம் மாணவர்களின் வருகையை கண்காணிக்க உள்ளோம். மாணவர்கள் வருகை எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை மனரீதியாக தயார்படுத்தும் வகையில் வகுப்புகளில் 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் மட்டுமே ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.பள்ளிக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்று வழங்கப்படும் என்ற விவகாரம் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளாதா அதனால் கேள்வித்தாளில் மாற்றம் வருமா என்ற சந்தேகம் மாணவர்களுக்கு இருக்கிறது. கேள்வித்தாளில் எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம் போலவே இருக்கும். அப்படி கேள்வித்தாளில் மாற்றம் செய்தால், மாணவர்களிடையே அது குழப்பதை ஏற்படுத்தும் என்பதால் தற்போது நடைமுறையில் இருக்கும் கேள்வித்தாள் முறையே தொடரும். மேலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் சில குறைக்கப்பட்டு இருந்தாலும், பாடப் பொருட்களை நீக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment