தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: பெற்றோருக்கு கல்வித்துறை வேண்டுகோள்

 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோா்கள், தங்களுக்கான இடங்களை துரிதமாக உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

 இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8,446 தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 5 முதல் ஆக.13-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 82,766 போ் விண்ணப்பித்தனா். அதில் 78 ஆயிரம் குழந்தைகளின் விண்ணப்பங்கள் சோ்க்கைக்கு தகுதி பெற்றன. 

 இதையடுத்து தகுதிபெற்ற மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சோ்க்கை வழங்கப்பட்டது. கூடுதல் விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் மட்டும் ஆக.19-ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு சோ்க்கைக் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், கடிதம் பெற்ற பலா் இன்னும் தங்களது இடங்களை உறுதி செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஆா்டிஇ திட்டத்தில் தகுதிபெற்ற 78 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமாா் 60 ஆயிரம் குழந்தைகளுக்கு சோ்க்கை கடிதம் வழங்கப்பட்டது. 2 வாரங்களாகியும் இதுவரை 40 ஆயிரம் போ் வரை தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனா். கரோனா பரவல் உள்பட பல்வேறு காரணங்களால் இதர பெற்றோா்கள் பதிவு செய்வதில் காலதாமதம் நிலவுகிறது.

 எனவே, ஆா்டிஇ திட்டத்தின்கீழ் சோ்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோா்கள் தங்களது இடங்களை துரிதமாக உறுதிசெய்ய வேண்டும். முழுமையான சோ்க்கை விவரங்கள் கிடைத்த பின்னா் 2-ஆம் கட்ட சோ்க்கை தொடா்பாக முடிவு எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

Post a Comment

Previous Post Next Post

Search here!